ரெய்ஸ்-2020 மெய்நிகர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ரெய்ஸ்-2020 மெய்நிகர் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.;

Update: 2020-10-05 14:49 GMT
புதுடெல்லி,

செயற்கை நுண்ணறிவு குறித்த மாபெரும் மெய்நிகர் மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து 2020 இன்று (05-ம்தேதி)முதல் 9-ம் தேதி வரை நடத்துகின்றன.

இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார். சர்வதேச செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்துகின்றனர்.

மெய்நிகர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து  பிரதமர் மோடி பேசியதாவது:-

செயற்கை நுண்ணறிவு பற்றிய விவாதத்தை ஊக்குவிக்க இது ஒரு சிறந்த முயற்சி. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ‘இளைஞர்களுக்கான பொறுப்பு ஏஐ’ திட்டத்தை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம்.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் கீழ் தங்கள் அடிப்படை படிப்பை முடித்துள்ளனர். இப்போது அவர்கள் ஏஐ திட்டத்தை உருவாக்குகிறார்கள்.

வேளாண்மை, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் அடுத்த தலைமுறைக்கு நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் போக்குவரத்து நெரிசல்களைக் குறைத்தல், கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற நகர்ப்புற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஏஐ க்கு ஒரு பெரிய பங்கைக் காண்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் உள்ள எம்ஐடி-யின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தின் இயக்குநர் பேராசிரியர் டேனியலா ரூஸ், கூகிள் ரிசர்ச் இந்தியாவின் சமூக நலனுக்கான செயற்கை நுண்ணறிவு இயக்குநர் டாக்டர் மிலிந்த் தம்பே, ஐபிஎம் இந்தியா மற்றும் தெற்காசியாவின் நிர்வாக இயக்குநர் சந்திப் படேல் உள்ளிட்ட நிபுணர்கள் அக்டோபர் 7 அன்று மூன்றாம் நாள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

சமூக மாற்றம், உள்ளிணைப்பு மற்றும் சுகாதாரம், வேளாண்மை, கல்வி மற்றும் திறன்மிகு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு ஆகியவற்றுக்காக எவ்வாறு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தலாம் என்பது குறித்து இவர்கள் விவாதிக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்