மல்லையா விவகாரம்: பிரிட்டன் அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு தெரியவில்லை - மத்திய அரசு தகவல்
மல்லையா விவகாரத்தில் பிரிட்டன் அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு தெரியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் உள்ள 13 வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச்சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும், சட்ட சிக்கல்கள் காரணமாக, அதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் மல்லையா விவகாரத்தில் பிரிட்டன் அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு தெரியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “மல்லையா பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாததால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மல்லையாவை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர தூதரகம், சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விஜய் மல்லையாவை திரும்ப அனுப்ப பிரிட்டன் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து தெரியாது” என்று அதில் தெரிவித்துள்ளது.