கொச்சி அருகே கடற்படை விமானம் விபத்து: 2 வீரர்கள் பலி
கேரள மாநிலம் கொச்சி அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் இரு வீரர்கள் உயிரிழந்தனர்.;
கொச்சி,
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில்:-
கொச்சி அருகே வழக்கம்போல் இன்று காலை 7மணி அளவில் கடற்படைக்குச் சொந்தமான கிளைடர் பயிற்சி விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, கடற்படைத் தளத்துக்கு அருகே இருக்கும் தொப்பும்பாடி பாலத்தின் அருகே பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப்படையினர் விரைந்து சென்று விமானத்தில் சிக்கியிருந்த லெப்டினெட் அதிகாரி ராஜீவ் ஜா, மற்றொரு அதிகாரி சுனில் குமார் ஆகியோர் மீட்கப்பட்டு, சஞ்சீவானி ராணுவ மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், அங்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவிக்ப்பட்டது. இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
காலையில் நடைபயிற்சிக்குச் சென்றவர்கள் விமானம் விபத்துக்குள்ளானதைப் பார்த்து துறைமுகத்துக்கு தகவல் தெரிவித்தபின்பு, அவர்கள் மூலம்தான் விமானப்படைத்தளத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்து ராணுவ ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கும் தாமதமாகியதால், இருவீரர்களையும் காப்பாற்ற முடியாமல் போனது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் பலியான லெப்டினென்ட் அதிகாரி சஞ்சீவ் ஜா டேராடூனையும், சுனில் குமார் பிஹார் மாநிலம், போஜ் நகரையும் சேர்ந்தவர்கள்.