‘இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் கொலை அல்ல, தற்கொலை தான்’; எய்ம்ஸ் டாக்டர்கள் குழு சி.பி.ஐ.க்கு அறிக்கை

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் கொலை அல்ல, தற்கொலை தான் என்று டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் சி.பி.ஐ.யிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2020-10-03 21:54 GMT
புதுடெல்லி,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது 34) கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பீகாரில் வசித்து வரும் இவரது தந்தை கே.கே.சிங், தனது மகன் தற்கொலைக்கு நடிகை ரியா சக்ரவர்த்தி தான் காரணம் என்று பாட்னா போலீசில் புகார் அளித்தார். மேலும் தனது மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ. விசாரிக்க தொடங்கியது. இந்த நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக அவரது காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டவர் களை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தடயவியல் பிரிவை சேர்ந்த 6 பேர் டாக்டர்கள் குழுவினர் தயாரித்த மருத்துவ ஆய்வு அறிக்கை சி.பி.ஐ.க்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தடயவியல் பிரிவின் தலைவரான டாக்டர் சுதீர் குப்தா கூறுகையில்,“ சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக எங்கள் குழு ஆய்வு செய்து இறுதி முடிவுக்கு வந்துள்ளது. அதில் சுஷாந்த் சிங் விஷம் கொடுத்தோ அல்லது கழுத்தை நெரித்தோ கொல்லப்படவில்லை. தூக்கில் தொங்கியதற்கான காயத்தை தவிர அவரது உடலில் வேறு காயம் இல்லை. கழுத்து நெரிக்கப்பட்டது மற்றும் மூச்சு திணறடிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. எனவே சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கி இருப்பதும், அது தற்கொலை தான் என்பதும் உறுதியாகி உள்ளது” என்றார்.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக் டர்கள் குழு அறிக்கை காரணமாக சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்கு தீர்வு ஏற்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்