மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா; 58 பேர் பலி
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்துள்ளது. ஆனாலும் 58 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை இன்னும் உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. உலகளவில் 3.39 கோடிப் பேரை இந்த வைரஸ் தொற்று பாதித்துள்ளது. தொற்றின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, கொலம்பியா தொடர்கின்றன. இந்த வைரஸ் தாக்குதலில் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வருகிற நாடுகளாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, இங்கிலாந்து ஆகியவை இருக்கின்றன.
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் புதிதாக 86 ஆயிரத்து 821 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் 85 ஆயிரத்து 376 பேர் தொற்றில் இருந்து விடுபட்டு, ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள். மேலும் இந்த ஒரு நாளில் 1,181 பேர் பலியாகியும் இருக்கிறார்கள்.
தற்போது நாட்டில் 9.40 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரையும் (சி.ஆர்.பி.எப்.) கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை. இதுபற்றி டெல்லியில் விஜய் சவுக்கில் நேற்று ‘பிட் இந்தியா பிரிடம் ரன்’ என்ற பெயரில் நடந்த ஓட்டத்தின் நிறைவின்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவரான ஏ.பி. மகேஷ்வரி கூறியதாவது:-
எங்கள் படையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் குணம் அடைந்து விட்டனர்.
எங்கள் படையில் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் அளவு 80-85 சதவீதமாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற ஓட்டங்களை நடத்துவது நாம் நமது உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை பெருக்க வேண்டும் என்ற உண்மையை கோடிட்டுக் காட்டுவதற்குத்தான். மேலும் நாம் முக கவசங்களை அணிந்து கொள்வது, தனிமனித உடல் இடைவெளியை உறுதி செய்வது போன்ற மருத்துவ நெறிமுறைகளை பின்பற்றும்போது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராட முடியும். அதற்கான உடல்திறனையும் நாம் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும்கூட, 58 பேர் மட்டுமே அதற்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.