ஆர்மீனியா-அஜர்பைஜான் மோதலுக்கு இந்தியா கவலை; பேச்சுவார்த்தையில் ஈடுபட அறிவுறுத்தல்

ஆர்மீனியா-அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதலுக்கு இந்தியா கவலை தெரிவித்து உள்ளது.

Update: 2020-10-01 20:12 GMT
புதுடெல்லி,

மேற்கு ஆசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே நகர்னோ-கராபக் மலைப்பிராந்தியம் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இருநாட்டு ராணுவம் இடையே நடந்து வரும் மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலுக்கு இந்தியா ஆழ்ந்த கவலை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‘ஆர்மீனியா-அஜர்பைஜான் இடையே நகர்னோ-கராபக் தொடர்பாக கடந்த 27-ந்தேதி வெடித்த மோதல் தொடர்ந்து வருவதில் கவலைக்குள்ளாக்கும் தகவல்களை பார்க்கிறோம். இந்த மோதலை உடனடியாக நிறுத்திவிட்டு, கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறோம்’ என்று கூறினார்.

இந்த மோதலின் நீடித்த எத்தகைய முடிவும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையின் மூலமே கிடைக்கும் என இந்தியா நம்புவதாக கூறிய ஸ்ரீவத்சவா, இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிக்காக மின்ஸ்க் குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்