பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு: தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும்

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

Update: 2020-10-01 00:06 GMT
புதுடெல்லி,

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் வரவேற்றும், எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:-

அத்வானி

இந்த தீர்ப்பை அத்வானி மகிழ்ச்சியுடன் வரவேற்று ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார். அதில் அவர், “இது ஒரு முக்கியமான முடிவு. எங்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான விஷயம். கோர்ட்டு தீர்ப்பு பற்றிய செய்தியைக் கேட்டபோது ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு நாங்கள் வரவேற்றோம்” என கூறி உள்ளார்.

அத்வானி ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். அதில் அவர், “இந்த தீர்ப்பு, எனது தனிப்பட்ட மற்றும் பா.ஜ.க.வின் நம்பிக்கையையும், ராமஜென்மபூமி இயக்கம் மீதான அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது. இந்த தீர்ப்பு கடந்த ஆண்டு நவம்பரில் வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிச்சுவடுகளில் வந்துள்ளது என்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன். இது அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலைக் காணும் எனது நீண்ட கால கனவுக்கு வழி வகுத்து தந்திருக்கிறது” என கூறி உள்ளார்.

முரளி மனோகர் ஜோஷி

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, “தனிக்கோர்ட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. நான் கடவுளே, அனைவருக்கும் ஞானத்தை வழங்கும், ஜெய் ஜெய் ஸ்ரீராம் என்று மட்டுமே கூறுவேன். எங்கள் திட்டங்கள் எந்த ஒரு சதித்திட்டத்தின் கீழும் இல்லை என்று இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது. பாபர் மசூதி சர்ச்சை, இந்த தீர்ப்புடன் முடிவுக்கு வரவேண்டும்” என கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.

இந்த தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரவேற்றுள்ளது.

அதன் பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “சர்ச்சைக்குரிய கட்டமைப்பை இடித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். வரவேற்கிறது. இந்த முடிவுக்கு பிறகு, சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் ஒற்றுமை, நல்லிணக்கத்தில் ஒன்றிணைய வேண்டும். தேசத்தின் முன் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கும், இந்த நாட்டை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வதற்கும் பணியாற்ற வேண்டும்” என கூறி உள்ளார்.

உபி. முதல்-மந்திரி

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீர்ப்பை வரவேற்றார். அவர், “இது சத்தியத்தின் வெற்றி. சத்தியமே ஜெயிக்கும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை இந்த தீர்ப்பு காட்டுகிறது. மேலும் முந்தைய காங்கிரஸ் அரசு, அரசியல்வாதிகள், துறவிகள், விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் மற்றும் மற்றவர்களை இந்த சதியில் சிக்க எவ்வாறு வடிவமைத்தது என்பதை காட்டுகிறது. தங்கள் தவறான செயலுக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களின் சதிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” என கூறினார்.

காங்கிரஸ் கட்சி

தனிக்கோர்ட்டு தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவிக்கையில், “அரசியலமைப்பிலும், சமூக நல்லிணக்கத்திலும், சகோதரத்துவ உணர்விலும் உள்ளார்ந்த நம்பிக்கை உள்ள ஒவ்வொரு இந்தியரும், தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், வலியுறுத்துகிறார்கள்” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதற்கான தனிக்கோர்ட்டின் முடிவு, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கும், அரசியலமைப்பு சட்ட உணர்வுகளுக்கும் எதிரானது” என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், “சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 5 பேர் கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி வழங்கிய தீர்ப்பில் பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதம், சட்டத்தின் விதிமுறைகளின் மீறல் என்று கூறி உள்ளனர். ஆனால் தனிக்கோர்ட்டு குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும் விடுவித்துள்ளது. இது தனிக்கோர்ட்டின் தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு எதிரானது என்பதை தெளிவாக காட்டுகிறது” எனவும் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் விவகாரக்குழு விடுத்த அறிக்கையில், “குற்றம் சுமத்தப்பட்டவர்களின் விடுதலை, நீதியின் பரிகாசம். இதற்கு 28 நீண்ட ஆண்டுகள் ஆகி உள்ளன. ஆனால் நீதி வழங்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் 9-ல் வழங்கிய தீர்ப்பில், பாபர் மசூதி இடிப்பை சட்டத்தின் மிக மோசனமான மீறல் என கூறியது. ஆனால் லக்னோ கோர்ட்டு, இந்த குற்றத்தின் முக்கிய குற்றவாளிகள், குற்றம் செய்யவில்லை என்று கண்டறிந்துள்ளது” என கூறி இருக்கிறது.

முஸ்லிம் அமைப்புகள்

பாபர் மசூதி நில பிரச்சினையில் முக்கிய வழக்குதாரராக இருந்த இக்பால் அன்சாரி தீர்ப்பை வரவேற்றார். அவர், “அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது நல்லது. அனைவரும் நிம்மதியாக வாழ்வோம். இதில் புதிய சிக்கல்கள் கூடாது. அயோத்தியில் இந்து, முஸ்லிம் மக்கள் எப்போதும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இதில் இனி எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுகிறேன். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கவுரவித்தது போல இந்த தீர்ப்பும் ஏற்கப்பட வேண்டும்” என கூறினார்.

அதே நேரத்தில் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் ஜபார்யாப் ஜிலானி எதிராக கருத்து கூறி உள்ளார். அவர், “இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்ததில் பெரிய சட்டப்பிழை இருக்கிறது. இது தவறான தீர்ப்பு. இது சாட்சியத்துக்கும், சட்டத்துக்கும் எதிரானது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்” என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்