தனியார்மயமாக்குதல் காரணமாக ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு காரணமாக ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-22 08:10 GMT
புதுடெல்லி,

ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் நவீன மேம்படுத்தப்பட்ட ரயில்களை இயக்குவது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து இன்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார்.

அவர் பேசிய போது, “அடுத்த ஐந்தாண்டுகளில் எத்தனை தனியார் ரயில்கள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது? ரயில்வே தனியார்மயமாக்கலில், ரயில்வேயில் உள்ள பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் அரசிடம் உள்ளதா? இந்த அரசுப் பணியாளர்களை தனியார் இயக்கும் ரயில்களில் பணியமர்த்தும் திட்டம் உள்ளதா?” என்று கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய ரயில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த எழுத்துபூர்வப் பதிலில் கூறியதாவது;-

“தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் நவீனமான ரயில்களை தனியாரின் பங்களிப்போடு இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த 12 தடங்களில் தனியார் நிறுவனங்களிடமிருந்து பயணிகள் ரயில்கள் இயக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதன் தடங்களின் விபரங்கள் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் ரயில், ரயில்பாதை பாதுகாப்பு, உள்ளிட்டவை மத்திய அரசிடமே தொடர்ந்து இருக்கும். தனியார்மயமாக்குதல் காரணமாக ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. தனியார் பங்களிப்போடு புதிய ரயில்கள் இயக்குவதால், தற்போது உள்ள பயணிகள் ரயில் சேவைகள் எதுவும் பாதிப்புக்கு உள்ளாகாது. இதன் காரணமாக தற்போது பணியில் உள்ள ஊழியர்களின் பணி பாதிக்கப்படாது.

மேலும், ரயில்வே ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, தனியார் இயக்கும் ரயில்களுக்கான ஊழியர்களை, (ரயில் ஓட்டுனர் மற்றும் காப்பாளர்) ரயில்வே துறையே வழங்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்