ஹர்ம்சிம்ராத் கவுர் ராஜினாமா ஏற்பு- அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவுப்படுத்துதல் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஹர்ம்சித்ராத் கவுர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Update: 2020-09-18 02:50 GMT
புதுடெல்லி,

மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில் சிரோமணி அகாலிதளமும் இடம் பெற்று இருந்தது. இந்த கட்சிக்கு மக்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக இருக்கிறார். 

மற்றொரு உறுப்பினராக அவரது மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல், மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் தொழில் மந்திரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த14-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மசோதாக்களுக்கு ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போது, சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மசோதாவுக்கு எதிரான வாக்கு அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மக்களவையில் மற்ற 2 வேளாண் மசோதாக்கள் மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் சுக்பீர் சிங் பாதல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு சிரோமணி அகாலி தளத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று திடீரென்று அறிவித்தார். ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினாலும் மத்திய அரசுக்கு சிரோமணி அகாலி தளத்தின் ஆதரவு தொடரும் என்றும் அப்போது அவர் கூறினார். அவர் இவ்வாறு பேசிய சிறிது நேரத்தில் மத்திய மந்திரி பதவியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தையும் வழங்கினார்.’

இதையடுத்து, பிரதமரின் பரிந்துரையை ஏற்று ஹர்ம்சிம்ராத் கவுர் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். ஹர்ம்சிம்ராத் கவுர் வகித்து வந்த உணவு பதப்படுத்துதல் துறை பொறுப்பு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல்  பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்