லடாக் எல்லையில் முழுமையான படை விலக்கலுக்கு இணைந்து செயல்பட வேண்டும் சீனாவுக்கு, இந்தியா அறிவுறுத்தல்

லடாக் எல்லையில் முழுமையான படை விலக்கலுக்கு இணைந்து பணியாற்ற வேண்டும் என சீனாவுக்கு, இந்தியா அறிவுறுத்தி உள்ளது.

Update: 2020-09-17 23:55 GMT
புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையேயான அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த மே மாதம் முதல் இரு நாடுகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அங்கு படைகளை குவித்து வலுக்கட்டாயமான ஊடுருவல் முயற்சிகளை மேற்கொள்ளும் சீனாவுக்கு இந்தியா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

கடந்த 3 வாரங்களில் மட்டும் அங்குள்ள பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இந்திய படைகளை மிரட்டும் வகையில் 3 முறை சீனப்படையினர் நடந்து கொண்டனர். அது மட்டுமின்றி கடந்த 45 ஆண்டு களில் இல்லாத வகையில் முதல் முறையாக வானை நோக்கி துப்பாக்கிச்சூடும் நடந்தது.

இதைப்போல கடந்த மாதம் 29-ந்தேதி சீனப்படைகள் மீண்டும் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவம் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தியது. அத்துடன், சீனாவின் இதுபோன்ற ஆக்கிரமிப்பு முயற்சிகளை முறியடிப்பதற்காக எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந்தியாவும் ராணுவத்தை குவித்து வருகிறது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் கிழக்கு லடாக் எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர்.

மேலும் இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகள் மாஸ்கோவில் இந்த மாத தொடக்கத்தில் சந்தித்து பேசினர். இதில் எல்லையில் அமைதி ஏற்படுத்துவதற்கான 5 அம்ச திட்டங்கள் உள்ளிட்ட ஒருமித்த கருத்து எட்டப்பட்டு இருந்தது.

இந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பங்கோங் ஏரி உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து விரைவில் படைகளை விலக்கி, அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவுடன் இணைந்து நேர்மையுடன் மேற்கொள்ளுமாறு சீனாவை, இந்தியா அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இரு நாட்டு ராணுவ மந்திரிகள் மற்றும் வெளியுறவு மந்திரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், லடாக்கின் அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து விரைவாகவும், முழுவதுமாகவும் படைகளை விலக்குவது என ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.

எனவே அதன் அடிப்படையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் பதற்றத்தை தணிப்பதில் இருதரப்பும் கவனம் செலுத்த வேண்டும். அங்கு மேற்கொள்ளும் எத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால், அந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

இதற்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அங்கு ஏற்கனவே நீடித்து வரும் நிலைமையை மாற்ற ஒருதலைப்பட்ச முயற்சிகள் மேற்கொள்ளக்கூடாது. அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியை சீனா தீவிரமாக மதித்து, அனுசரிக்கும் எனவும், அங்கு ஒருதலைப்பட்சமான மாற்றங்களை ஏற்படுத்த மேலும் முயற்சிக்காது எனவும் நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு அனுராக் ஸ்ரீவத்சவா கூறினார்.

முன்னதாக எல்லையில் படைகளை விலக்கி, அமைதியை மீட்டெடுப்பதற்கான பணிகளை இந்தியா தொடங்க வேண்டும் என சீனா கூறியிருந்தது. ஆனால் படை விலக்கலுக்கு இந்தியாவுடன் இணைந்து செயல்படுமாறு மத்திய அரசு நேற்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்