நாடாளுமன்றத்தில் துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்தார், நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில், நிர்மலா சீதாராமன் துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்தார். ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி கூடுதல் செலவினத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க கோரினார்.

Update: 2020-09-14 22:45 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில், 2020-2021 நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கையின் முதல் தொகுதியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதில், ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 852 கோடியே 87 லட்சம் கூடுதல் செலவினத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அவர் கோரினார்.

துணை மானிய கோரிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடியில், ரொக்க செலவினங்களுக்காக ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 983 கோடியே 91 லட்சம் கோரப்படுகிறது.

இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ரூ.14 ஆயிரத்து 231 கோடியே 96 லட்சம் ஒதுக்க அனுமதி கோரப்படுகிறது.

பிரதமர் ஏழைகள் நிதிஉதவி திட்டத்தில் தொழிலாளர் நல அமைச்சகம் தொடர்பான மானிய உதவிகளுக்காக ரூ.4 ஆயிரத்து 860 கோடி கோரப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், உணவு மானிய செலவுகளை சரிக்கட்ட ரூ.10 ஆயிரம் கோடி கோரப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதன உதவி அளிக்க ரூ.20 ஆயிரம் கோடிக்கு ஒப்புதல் கோரப்படுகிறது.

‘முத்ரா’ திட்டத்தில் வழங்கப்பட்ட சிசு கடன்களை திருப்பி செலுத்தியவர்களுக்கு 2 சதவீத வட்டி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக சிறுதொழில் வளர்ச்சி வங்கிக்கு மானியமாக ரூ.1,232 கோடி வழங்க ஒப்புதல் கோரப்படுகிறது.

100 நாள் வேலைத்திட்டத்துக்கு சம்பளம் உயர்த்தப்பட்டதால், கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. அதை ஈடுகட்ட ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஒப்புதல் கேட்கிறோம்.

ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு நேரடி நிதிஉதவி செலுத்துவதற்காக ரூ.30 ஆயிரத்து 957 கோடிக்கும், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம் வழங்குவதற்காக, ரூ.2 ஆயிரத்து 814 கோடியே 50 லட்சத்துக்கும் நாடாளுமன்ற ஒப்புதல் கேட்கப்படுகிறது.

15-வது நிதி கமிஷன் பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்க ரூ.46 ஆயிரத்து 602 கோடியே 43 லட்சத்துக்கு ஒப்புதல் கோரப்படுகிறது.  இவ்வாறு துணை மானிய கோரிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்