மலையில் இருந்து வீணாகும் மழை நீரை கிராம வயல்களுக்கு கொண்டுவர 30 ஆண்டுகளாக 3 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்!

மலையில் இருந்து வீணாகும் மழைநீரை தனது கிராமத்திற்கு கொண்டு வர 30 ஆண்டுகளாக 3 கி.மீ. தூரத்திற்கு முதியவர் ஒருவர் கால்வாய் வெட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-09-13 11:10 GMT
பாட்னா,

பீகார் மாநிலம், காயா மாவட்டத்தில் உள்ள கொத்திவாலா என்ற கிராமம் உள்ளது. காயா மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 80 கிமீ தூரத்தில் அடர்ந்த காடுகளும், மலைகளும் சூழ்ந்த இக்கிராமத்தைச் சேர்ந்தவர் லாயுங்கி புய்யான். இவர் கடந்த 30 ஆண்டுகளாக தனது கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தது.

அதனால் அவர் மலையிலிருந்து தனது ஊர் குளத்தை இணைக்கும் ஒரு கால்வாயை வெட்டும் முயற்சியில் களம் இறங்கினார். ஆனால் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் கிராமத்திலிருந்து பலர் வேலைவாய்ப்பைத் தேடி நகர்ப்புறங்களுக்குச் சென்றுவிட்டனர். ஆனால் அவர் தன் முயற்சியை கைவிடவில்லை.

விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு தான் இந்த கிராமத்தின் முக்கிய தொழிலாகக் கருதப்படுகிறது. அதனால் மழைக்காலங்களில் மலையிலிருந்து வழிந்தோடும் நீரை வீணாக ஆற்றில் கலப்பதை முதியவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனவே இவர் தனி ஒரு ஆளாக முயற்சி செய்து  30 ஆண்டுகளாக 3 கி.மீ. தூரத்திற்கு இந்த கால்வாயை வெட்டியுள்ளார். இது அங்குள்ள கால்நடைகளுக்கும், வயலுக்கும் பெரும் உதவியாக இருப்பதாக ஊர்மக்கள் கூறி உள்ளனர்.

அவர் தனக்காக மட்டுமல்லாமல் அந்த பகுதிக்கே உதவி செய்துள்ளார் என அங்குள்ள கிராம வாசிகள் முதியவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்