வறுமையை ஒழிக்க ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும்; பிரதமர் மோடி பேச்சு

வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2020-09-12 22:45 GMT
போபால்,

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மத்தியபிரதேச மாநிலத்தில் கிராமப்புற பகுதிகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அந்த வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்தியாவில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும். அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும். அந்த நோக்கத்தில்தான் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கொரோனா பரவல் இருக்கும் இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. முன்பு இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை கட்டி முடிக்க சராசரியாக 125 நாட்கள் ஆனது. ஆனால் கொரோனா காலத்தில் ஒரு வீடு 45 முதல் 60 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநிலங்களில் இருந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினார்கள். இந்த காலகட்டத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துதல், வீடுகள் கட்டுதல் போன்ற பணிகளுக்காக ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.23 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது.

சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் குறுகிய காலத்தில் வீடுகளை கட்ட முடிந்தது. மேலும் இந்த திட்டம் கிராமப்புற பொருளாரம் மேம்படவும் உதவியாக இருந்தது.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

நிகழ்ச்சியின் போது வீடுகளை பெற்ற பயனாளிகள் சிலருடன் மோடி கலந்துரையாடினார். சிங்க்ராலி என்ற இடத்தைச் சேர்ந்த பியாரிலால் யாதவ் என்ற பயனாளியுடன் அவர் பேசும் போது, இந்த வீடு கட்டும் திட்டம் ஏழைகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் நிம்மதியாக தூங்க முடியும் என்றும் கூறினார்.

தார் மாவட்டம் அம்ஜேரா கிராமத்தைச் சேர்ந்த குலாப் சிங் என்பவரின் மகன் பிரதமருடன் கலந்துரையாடும் போது, தங்கள் கிராம மக்கள் தாமாக முன்வந்து உதவி செய்ததாகவும், அவர்களுடைய கூட்டு முயற்சியுடன் வீட்டை கட்டி முடித்ததாகவும் தெரிவித்தார்.

குவாலியர் மாவட்டம் பிட்டர்வார் கிராமத்தைச் சேர்ந்த நரேந்திர நம்தியோ என்பவரின் மனைவி, தங்களுக்கு வீடு மற்றும் கழிவறை கட்டிக்கொடுத்து சமையல் கியாஸ் இணைப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தோடு, தங்கள் வீட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். அதை மோடி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்