அயோத்தியில் சர்வதேச அந்தஸ்துடன் ராம் பகவான் என்ற பெயரில் விமான நிலையம்
அயோத்தியில் ராம் பகவான் என்ற பெயரில் விமான நிலையம் அமைய உள்ளது. அதற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்படுகிறது.;
லக்னோ
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில்கட்ட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அயோத்தியாவில் ஒரு முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்க உத்தரவிட்டது. இந்தத்தீர்ப்பை இருதரப்பும் ஏற்றுக்கொண்டன.
இந்தநிலையில், ராமர்கோவில் கட்டுவதற்காக ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் 161 அடி உயரத்தில் 5 கோபுரங்களுடன் மிகப்பிரமாண்டமான முறையில் 3 ஆண்டுகளுக்குள் ராமர் கோவில் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜையும் நடைபெற்று பணிகள் நடந்து வருகின்றன
இந்த நிலையில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அறக்கட்டளை வங்கி கணக்குகளில் இருந்து ஒரு பெரியதொகை மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. போலி காசோலைகளைப் பயன்படுத்தி இரண்டு வங்கிகளில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்து உள்ளன.
மோசடியில் ஈடுபட்டவர் மூன்றாவது முறையாக பணத்தை எடுக்க முயன்றபோது, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் தொலைபேசியில் காசோலையை திரும்பப் பெறுவது குறித்து தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக மோசடி செய்தவருக்கு எதிராக அயோத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அயோத்தியில் முன்மொழியப்பட்ட விமான நிலையம் ராம் பகவான் என பெயரிடப்பட்டு சர்வதேச அந்தஸ்தைப் பெறும். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டிசம்பர் 2021 க்குள் விமான நிலைய பணியை முடிக்க காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தெரியவந்து உள்ளது.
அயோத்தியில் ஒரு பெரிய ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் போது, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பெரும் சுற்றுலாப் போக்குவரத்து இருக்கும் என்று அரசு நம்புகிறது. விமான நிலையம் இதற்கு மேலும் வசதியாக இருக்கும் என்று உத்தரப்பிரதேச அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
"விமான நிலைய கட்டுமானத்திற்காக 525 கோடி ரூபாய் யோகி அரசு ஒப்புதல் அளித்துள்ளது, ஏற்கனவே 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அதிக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன" என்று உத்தரபிரதேச சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நந்த் கோபால் நந்தி கூறி உள்ளார்.