இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 75 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 75 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.
புதுடெல்லி,
உலகளவில் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவின் மோசமான தாக்குதலுக்கு ஆளான 2-வது நாடு என்ற நிலையில் இந்தியா இருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் உலகளவில் கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையிலும் 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது என்பது ஆறுதல் அளிக்கிற அம்சமாக அமைந்துள்ளது.
கொரோனாவில் மீண்டவர்களில் முதல் இடத்தில் பிரேசில் இருக்கிறது. அங்கு 35.72 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் நமது நாட்டில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில், இதுவரை இல்லாத வகையில் 74 ஆயிரத்து 894 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்னர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 98 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவின் மீட்பு விகிதம் 77.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் புதிதாக 89 ஆயிரத்து 706 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) 11 லட்சத்து 54 ஆயிரத்து 549 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இந்தளவுக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம். இதுவரை நாட்டில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5 கோடியே 18 லட்சத்து 4 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 43 லட்சத்து 70 ஆயிரத்து 128 ஆக உள்ளது. இதில் அமெரிக்காவுக்கு (65.16 லட்சம்) அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,115 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 73 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. பலி விகிதம், 1.69 சதவீதமாக குறைந்துள்ளது.
நேற்று பலியான 1,115 பேரில் 380 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த நிலையில் கர்நாடகம் (146) கூடுதல் உயிரிழப்பை சந்தித்துள்ளது. அந்த மாநிலத்தை தொடர்ந்து கூடுதல் பலியை எதிர்கொண்ட மாநிலம் தமிழகம் ஆகும்.
ஆந்திராவில் 73 பேரும், உத்தரபிரதேசத்தில் 71 பேரும், பஞ்சாப்பில் 67 பேரும், மேற்கு வங்காளத்தில் 57 பேரும், அரியானாவில் 25 பேரும், மத்திய பிரதேசத்தில் 20 பேரும், டெல்லியில் 19 பேரும், ஜம்மு காஷ்மீரிலும், ஜார்கண்டிலும் தலா 14 பேரும், குஜராத், ஒடிசா, கேரளா, ராஜஸ்தானில் தலா 13 பேரும், சத்தீஷ்கார், புதுச்சேரி, உத்தரகாண்டில் தலா 12 பேரும், கோவாவில் 11 பேரும், தெலுங்கானாவில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பலி 10-க்கு கீழே நேர்ந்துள்ளது.
இதுவரை 73 ஆயிரத்து 890 பேர் பலியாகி உள்ள நிலையில், அதிகபட்ச பலியை சந்தித்து மராட்டியம் தொடர்ந்து முதல் இடத்தில் (27 ஆயிரத்து 407) உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. 3-வது இடம் வகிக்கிற கர்நாடகத்தில் 6,680 பேர் பலியாகி உள்ளனர்.
1,000-க்கும் அதிகமானோரை டெல்லி (4,618), ஆந்திரா (4,560), உத்தரபிரதேசம் (4,047), மேற்கு வங்காளம் (3,677), குஜராத் (3,133), பஞ்சாப் (1,990), மத்திய பிரதேசம் (1,609), ராஜஸ்தான் (1,164) ஆகியவை இழந்துள்ளன.
நாட்டில் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 97 ஆயிரத்து 394 ஆகும். இது மொத்த பாதிப்பில் ஐந்தில் ஒரு பங்குதான் (20.53 சதவீதம்) என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.