லடாக் எல்லையில் பதற்றம் நீடிப்பு: சீனா, அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும்

லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனா அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Update: 2020-09-09 23:15 GMT
புதுடெல்லி, 

லடாக்கில் இந்திய, சீன எல்லையில் கடந்த மே மாதம் தொடங்கி சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. ஆனால் தனது தவறை மறைப்பதற்கு இந்தியா மீது அபாண்டமாக பழிபோடுகிறது.

கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும், சென்ற ஆகஸ்டு 29-ந் தேதி கிழக்கு லடாக் பகுதியில் பங்கோங் சோ ஏரி பகுதியிலும் சீன துருப்புகள் அத்துமீறி ஆக்கிரமிக்க முயற்சித்தபோது இந்திய படைகள் பதிலடி கொடுத்து அந்த முயற்சியை தடுத்தன.

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும், மறுபக்கம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு மனப்பாங்கில்தான் சீனா செயல்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில்தான், கடந்த 7-ந் தேதி இரவு சீன துருப்புகள் பயங்கரமான ஆயுதங்களுடன் அசல்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முன்னோக்கிய நிலைகளில் ஒன்றை நோக்கி நெருங்கி வர முயற்சித்தன. அதை இந்திய படை வீரர்கள் தடுக்க முயற்சித்தபோது, அவர்களை பயமுறுத்த துப்பாக்கி சூடு நடத்தி விட்டு பழியை இந்தியா மீது போட்டது.

இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததை தொடர்ந்து, எல்லையில் இருந்து சீன துருப்புகள் முகாம்களுக்கு விரைவில் திரும்பி விடும் என கூறி பாசாங்கு செய்தது. ஆனாலும் தொடர்ந்து எல்லையில் படைகளை குவித்து இருப்பதால் பதற்றம் நீடிக்கிறது.

சீன துருப்புகள் எந்த தருணத்திலும் இழந்த களத்தை மீண்டும் பெற ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள்; அவர்களது நடவடிக்கைகள் உள்ளூர் தளபதிகளால் கண்டுகொள்ளப்படாவிட்டாலும், மேலிடத்தால் கட்டுப்படுத்தப்படுவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் இங்குள்ள உயரமான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இங்கு சீன துருப்புகள் அத்துமீற முயற்சித்தால், இந்தியா பதிலடி கொடுக்கும். எல்லா இடங்களிலும் இந்திய படைகள் தயார் நிலையில் இருக்கின்றன என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரையில் ‘பிங்கர்-4’ பகுதியில் சீனா படைகளை குவித்தாலும், அங்கும் இந்தியாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த இடம்தான், அசல்கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்திய, சீன எல்லை மோதல் விவகாரத்தில் அமைதியான தீர்வு பிறக்கும் என இஸ்ரேல் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆசிய, பசிபிக் பிராந்திய துணை தலைமை இயக்குனர் கிலாட் கோஹன் நேற்று கருத்து தெரிவிக்கையில், “இந்தியா, சீனா என இரு ஆசிய நாடுகளுடனும் இஸ்ரேல் நல்லுறவு வைத்துள்ளது. எனவே எல்லை பிரச்சினையில் இரு நாடுகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்” என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்