ஊரடங்கு என்பது கொரோனா மீதானது அல்ல, ஏழைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - ராகுல் காந்தி

ஊரடங்கு என்பது கொரோனா மீதானது அல்ல, அது ஏழைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

Update: 2020-09-09 23:30 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு (பொது முடக்கம்) தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாக வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று அவர் வெளியிட்ட 4-வது வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-

ஊரடங்கு நடவடிக்கை, கொரோனா வைரஸ் மீதான தாக்குதல் அல்ல. அது இந்தியாவில் உள்ள ஏழைகள் மீதான தாக்குதல். இது நமது இளைஞர்களின் எதிர்காலம் மீதான தாக்குதல்.

ஊரடங்கு, தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு கடைக்காரர்கள் மீதான தாக்குதல். ஊரடங்கு, அமைப்புசாரா தொழில்துறை மீதான தாக்குதல். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் இந்த தாக்குதலுக்கு எதிராக நிற்க வேண்டும்.

கொரோனாவின் பெயரால் என்ன செய்யப்பட்டாலும், அது அமைப்புசாரா தொழில்துறை மீதான 3-வது தாக்குதல் ஆகும்.

எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி, ஊரடங்கை அறிவித்தபோது, நீங்கள் (பிரதமர் மோடி) அவர்கள் மீதான தாக்குதலை தொடங்கினீர்கள். இந்த போராட்டம் 21 நாட்களுக்கு இருக்கும் என்று பிரதமர் அறிவித்தார். ஆனால் 21 நாளில் அமைப்பு சாரா தொழில் துறையின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது.

ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வந்து திறக்கப்பட வேண்டிய நேரம் வந்தது. அப்போது ஏழைகளுக்கு உதவ வேண்டியது அத்தியாவசியமானது என்று பல முறை மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கூறியது. என்.ஒய்.ஏ.ஒய். போன்ற திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், மக்களின் வங்கிக்கணக்குகளில் பணம் நேரடியாக செலுத்தப்பட வேண்டும் என்று கூறியது. ஆனால் அரசு அதை செய்யவில்லை. (இந்த என்.ஒய்.ஏ.ஒய். திட்டம், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதாகும். அடித்தட்டு மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் அளிக்க உறுதி அளித்தது.)

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருக்கு நீங்கள் ஒரு சலுகை தொகுப்பை தயாரித்து தர வேண்டும் என்று பரிந்துரைத்தோம். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இந்த பணம் இன்றி அவர்களால் வாழ முடியாது என கூறினோம். ஆனால் அதையும் அரசு செய்யவில்லை. அதற்கு பதிலாக அரசு 15-20 பணக்காரர்களின் பல லட்சம் கோடி மதிப்புள்ள வரிகளை தள்ளுபடி செய்தது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த வீடியோவுடன் டுவிட்டரில் இந்தியில் ஒரு பதிவையும் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “திடீரென ஊரடங்கை அறிவித்தது, அமைப்பு சாரா தொழில் துறையினருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை என நிரூபிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களில் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வந்து விடுவோம் என வாக்குறுதி தரப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக கோடிக்கணக்கானோரின் வேலைகளுக்கும், சிறு தொழில் நிறுவனங்களுக்கும்தான் முடிவு கட்டப்பட்டது. இந்த வீடியோவை பார்த்து பிரதமர் மோடியின் மக்கள் விரோத பேரழிவு திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்