விரைவில் ஒவ்வொரு கிராமமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் - பிரதமர் மோடி

விரைவில் ஒவ்வொரு கிராமமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2020-09-09 15:45 GMT
புதுடெல்லி,

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டமான 'ஸ்வானிதி' திட்டத்தின் பயனாளர்களிடம் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா தொற்று நோய் ஏழைகளை, விளிம்பு நிலை மக்களை அதிகம் பாதித்துள்ளது. பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்களுக்கு உதவ அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஸ்வானிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகளை அரசு உறுதி செய்யும். ஆரம்ப கடன் தொகையாக ரூ.10 ஆயிரம், உஜ்வாலா திட்ட பலன்கள், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு ஆகியவற்றை பெறலாம்.

சாலையோர விற்பனையாளர்களுக்கு ஒரு புதிய அடையாளத்தையும் வாய்ப்பையும் இத்திட்டம் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் ரூ.10,000 கடன் பெற்றுக்கொள்ளலாம். தங்கள் வியாபாரத்தை மேம்படுத்தி, குறித்த காலத்தில் கடனை செலுத்தினால், படிப்படியாக கடன் அளவை உயர்த்த முடியும்.

வியாபாரிகளுக்கான ஸ்வானிதி (சுயத்திட்டமிடல்) திட்டத்தின் மூலம் பயனடைய வியாபாரிகள் உரிய ஆவணங்களை அரசிடம் சமர்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்காக எந்த சேவை மையத்தையும் வியாபாரிகள் அணுகலாம். நகராட்சி அலுவலகங்கள் அல்லது வங்கிகள் மூலமும் வியாபாரிகள் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

4.5 லட்சம் நடைபாதை வியாபாரிகள், இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டனர். இவர்களில் 1.4 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ரூ.140 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயின் போது 20 கோடி பெண்களின் ஜன் தன் திட்ட வங்கி கணக்குகளில் ரூ.31 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் 1000 நாட்களுக்குள் ஆப்டிகல் பைபர் இணைப்பு வழங்க தீர்மானித்துள்ளோம். விரைவில் ஒவ்வொரு கிராமமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும். அதன் மூலம் உலகம் கிராமங்களுடன் இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், குவாலியர், சாஞ்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று சாலையோர வியாபாரிகளிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேலும் செய்திகள்