பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின்கீழ் 42 கோடி ஏழைகளுக்கு ரூ.68 ஆயிரம் கோடி நிதிஉதவி

பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் 42 கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ரூ.68 ஆயிரத்து 820 கோடி நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-08 22:30 GMT
புதுடெல்லி, 

பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் 42 கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ரூ.68 ஆயிரத்து 820 கோடி நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன. அவை விரைந்து நிறைவேற்றப்படுவதை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ், 42 கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ரூ.68 ஆயிரத்து 820 கோடி நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் கிசான் நிதிஉதவி திட்டத்தின்கீழ் 8 கோடியே 94 லட்சம் விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.17 ஆயிரத்து 891 கோடி வழங்கப்பட்டுள்ளது.

‘ஜன்தன்’ வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு முதல் தவணையாக 20 கோடியே 65 லட்சம் பேருக்கு ரூ.10 ஆயிரத்து 325 கோடியும், இரண்டாம் தவணையாக 20 கோடியே 63 லட்சம் பெண்களுக்கு ரூ.10 ஆயிரத்து 315 கோடியும், மூன்றாம் தவணையாக 20 கோடியே 62 லட்சம் பெண்களுக்கு ரூ.10 ஆயிரத்து 312 கோடியும் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2 தவணைகளாக மொத்தம் ரூ.2 ஆயிரத்து 814 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 82 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 987 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் சுமார் 75 கோடி பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து மாதந்தோறும் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாதம்வரை இந்த உதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், 5 கோடியே 32 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 லட்சத்து 67 ஆயிரம் டன் உணவு தானியங்களும், கொண்டைக்கடலையும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், ஏப்ரல் மாதத்தில் இருந்து 8 கோடியே 52 லட்சம் இலவச சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் இருந்து 36 லட்சத்துக்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் மொத்தம் ரூ.9 ஆயிரத்து 543 கோடி பணத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.

100 நாள் வேலைத்திட்டத்தில், ஏப்ரல் மாதத்தில் இருந்து சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. சம்பள நிலுவைத்தொகை வழங்க மாநிலங்களுக்கு ரூ.59 ஆயிரத்து 618 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்