துர்கா பூஜை கிடையாது என புரளி; நிரூபித்தால் மக்கள் முன் 101 தோப்பு கரணம் போடுவேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்

துர்கா பூஜை கிடையாது என மேற்கு வங்காள அரசு கூறியதனை நிரூபித்தால் மக்கள் முன் 101 தோப்பு கரணம் போடுவேன் என மம்தா பானர்ஜி ஆவேசமுடன் கூறியுள்ளார்.

Update: 2020-09-08 14:46 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.  அந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் துர்கா பூஜை திருவிழா சிறப்பு பெற்றது.  இந்த வருடம், வருகிற அக்டோபர் 22ந்தேதி தொடங்கி 26ந்தேதி வரை திருவிழா நடைபெறும்.  5 நாட்கள் நடைபெற கூடிய இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

எனினும், உலகில் கொரோனா பாதிப்புகள் அதிகம் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது.  மேற்கு வங்காளத்தில் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கியுள்ளது.  இதுவரை 3,620 பேர் கொரோனா பாதிப்புகளால் பலியாகி உள்ளனர்.  23,216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மம்தா பானர்ஜி இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, துர்கா பூஜை பற்றி அரசியல் கட்சி ஒன்று வதந்திகளை பரப்பி வருகிறது.  இதுபற்றி எந்த கூட்டமும் எங்களால் நடத்தப்படவில்லை.

ஆனால், மேற்கு வங்காள அரசு இனி மாநிலத்தில் துர்கா பூஜை கிடையாது என கூறியது போன்ற புரளிகள் பரவி வருகின்றன.  இதனை நிரூபித்தால் நான் மக்கள் முன்னிலையில் 101 தோப்பு கரணம் போடுவேன் என ஆவேசமுடன் கூறியுள்ளார்.

கடந்த ஜூலையில் பேசிய மம்தா பானர்ஜி, துர்கா பூஜை கொண்டாடுவதற்கு இன்னும் காலம் உள்ளது.  நாம் துர்கா பூஜையை கொண்டாட முடியாமல் போய் விடுமா? பூஜையை கொண்டாட நீங்கள் விரும்பினால், வைரஸ் பரவல் தொடராமல் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

அதனால், அனைவரும் முறையாக கவனமுடன் செயல்பட வேண்டும்.  தேவையில்லாமல் ஒன்று கூட வேண்டாம்.  முக கவசம் அணியுங்கள்.  இதற்காக முறையாக பிரசாரம் செய்யுங்கள்.  ஏதேனும் விவகாரம் என்றால் அதுபற்றி போலீசாரிடம் தெரிவியுங்கள் என்று கூறினார்.

மேலும் செய்திகள்