இந்தியாவில் இதுவரை 4.95 கோடி மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,20,362 -சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Update: 2020-09-07 04:50 GMT
புதுடெல்லி,

இந்த நூற்றாண்டில் மனித குலம் சந்திக்கும் மிகப்பெரும் சவாலாக உருவாகி இருக்கிறது கொரோனா நோய்த்தொற்று. கொரோனாவை தவிர வேறு எதையும் சிந்திப்பதற்கு மனிதனை அது விடவில்லை. ஏழைகள் முதல் கோடீசுவரர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கபளீகரம் செய்ய காத்திருக்கும் கொரேனாவிடம் இருந்து தப்புவது குதிரைக்கொம்பாக மாறி இருக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்கி இந்த சிக்கலில் இருந்து மக்களை விடுவிக்க அனைத்து நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக மருத்துவ ஆய்வகங்கள் இரவு-பகலாக பணியாற்றுகின்றன. ஆனாலும் இந்த பூனைக்கு இன்னும் யாரும் மணி கட்டவில்லை.

நாள்தோறும் லட்சக்கணக்கில் புதிய தொற்றுகளும், ஆயிரக்கணக்கில் புதிய மரணங்களும் ஏற்படும் சேதிகள்தான் உலக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. கொரோனாவின் இத்தகைய மனித வேட்டைக்கு இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.   பலி எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடம் என்ற மோசமான சாதனையை தொடர்கிறது.  இந்தியாவில் தொற்று பரவலைக் கண்டறிய பரிசோதனைகளும் அதிக அளவு மேற்கொள்ளப்படுகின்றன. 

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் இதுவரை 4 கோடியே 95 லட்சத்து 51 ஆயிரத்து 507- சளி மாதிரிகள் கொரோனா பாதிப்பை கண்டறிய பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 லட்சத்து 20 ஆயிரத்து 362 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்