மோடியின் 70-வது பிறந்த நாள், 17-ந் தேதி கொண்டாட்டம்: பிளாஸ்மா தானம் உள்ளிட்ட மக்கள் நல பணிகளுக்கு பா.ஜ.க. ஏற்பாடு

பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த தினம் வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பிளாஸ்மா தானம் உள்ளிட்ட மக்கள் நல பணிகளுக்கு பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2020-09-07 01:13 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், வாத்நகரில், 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி, தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி, ஹிரான் பென் மோடி தம்பதியரின் 3-வது மகனாக பிறந்தார்.

வருகிற 17-ந் தேதி அவரது 70-வது பிறந்த தினம் ஆகும். இதை சிறப்பாக கொண்டாட பாரதீய ஜனதா கட்சியினர் விரும்புகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடியின் 70-வது பிறந்த தினத்தையொட்டி, பல வார கொண்டாட்டங்களுக்கு பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மறுஅமர்வு வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இந்த நாளில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை தொடங்கி, கூட்டத்தொடர் முடியும் போது அக்டோபர் 2-ந் தேதி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கொண்டாட்டங்களின்போது, பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரசாரம், துணியால் தயாரிக்கப்பட்ட பைகளை வினியோகித்தல், ரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், மூக்கு கண்ணாடிகள் வழங்கும் முகாம், பிளாஸ்மா தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த கொண்டாட்டங்களின் முன்னுரிமையாக பொதுநலன் இருக்கும் என்று அரியானா மாநில பா.ஜ.க. தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, பிரதமர் மோடி பிறந்த தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டுகோள் விடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்போம் என கூறினார்.

மேலும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் என்று மக்களை கேட்போம். அதற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறு கூறுவோம். இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் போன்றவையும் நடத்தப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்