தாதா தாவூத் இப்ராகிம் பேச விரும்புவதாக கூறி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டுக்கு போன் அழைப்பு - போலீசார் தீவிர விசாரணை

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் பேச விரும்புவதாக கூறி அவரது வீட்டுக்கு வந்த போன் அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-09-06 20:01 GMT
மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் வீடான ‘மாதோஸ்ரீ’ மும்பை பாந்திரா, கலாநகர் பகுதியில் உள்ளது. இங்கு உத்தவ் தாக்கரே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் முதல்-மந்திரியின் வீட்டுக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. அப்போது பேசிய நபர், துபாயில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். இந்த தகவல் நேற்று வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ’மர்மநபர் சனிக்கிழமை இரவு 2 முறை மாதோஸ்ரீ இல்ல தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உள்ளார். அந்த ஆசாமி முதல்-மந்திரியிடம் தாவூத் இப்ராகிம் பேச விரும்புவதாக கூறியுள்ளார். எனினும் போன் ஆபரேட்டர் அந்த அழைப்பை முதல்-மந்திரிக்கு மாற்றவில்லை. போனில் பேசியவர் துபாயில் இருந்து தாவூத் இப்ராகிமுக்காக பேசுவதாக மட்டும் கூறியுள்ளார். ஆனால் அவரின் அடையாளத்தை கூறவில்லை‘ என்றார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாதோஸ்ரீயில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ’போன் அழைப்பு துபாயில் இருந்து வந்ததா அல்லது வேறு பகுதியில் இருந்து வந்ததா என்பதை கண்டறிந்து வருகிறோம். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது‘ என்றார்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளி ஆவார். அவர் பாகிஸ்தான் கராச்சியில் இருப்பதாக சமீபத்தில் அந்த நாட்டு அரசே ஒப்புக்கொண்டு பின்னர் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்