இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஜி.எஸ்.டி. பறித்துவிட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை ஜி.எஸ்.டி. பறித்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.

Update: 2020-09-06 18:59 GMT
புதுடெல்லி,

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) அமலாக்கம், லடாக் பிரச்சினை, கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் மத்திய அரசின் செயல்பாட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடுமையாக விமர்சித்து வருகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, முறைசாரா தொழில்கள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் என்று அவர் வர்ணித்தார்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டம் என்றும், ஒரே வரி, குறைந்த வரி, எளிமையான வரி என்ற முறையில் அதை செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்ததாகவும், ஆனால் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. முற்றிலும் மாறுபட்டது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஜி.எஸ்.டி. சரியான வரிவிதிப்பு முறை அல்ல. இது இந்தியாவில் உள்ள ஏழைகள், சிறிய, நடுத்தர தொழில் செய்வோர் மற்றும் கடைக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த ஜி.எஸ்.டி. வரியை ‘கப்பார் சிங் வரி’ என்று சொல்லலாம்.

இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட 2-வது பெரிய தாக்குதல்தான் ஜி.எஸ்.டி. இது முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. எனவே இந்த வரிக்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டு குரல் எழுப்ப வேண்டும்.

ஜி.எஸ்.டி. என்றால் பொருளாதார சீரழிவு. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு குறைந்ததற்கு மோடி அரசின் ஜி.எஸ்.டி.தான் முக்கிய காரணம். இந்த வரி லட்சக்கணக்கான சிறு தொழில்களை நாசமாக்கிவிட்டது. கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு, எதிர்காலத்தை பறித்துவிட்டது. மாநிலங்களின் பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்