இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,432-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்த நூற்றாண்டில் மனித குலம் சந்திக்கும் மிகப்பெரும் சவாலாக உருவாகி இருக்கிறது கொரோனா நோய்த்தொற்று. கொரோனாவை தவிர வேறு எதையும் சிந்திப்பதற்கு மனிதனை அது விடவில்லை. ஏழைகள் முதல் கோடீசுவரர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கபளீகரம் செய்ய காத்திருக்கும் கொரேனாவிடம் இருந்து தப்புவது குதிரைக்கொம்பாக மாறி இருக்கிறது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்கி இந்த சிக்கலில் இருந்து மக்களை விடுவிக்க அனைத்து நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக மருத்துவ ஆய்வகங்கள் இரவு-பகலாக பணியாற்றுகின்றன. ஆனாலும் இந்த பூனைக்கு இன்னும் யாரும் மணி கட்டவில்லை.
நாள்தோறும் லட்சக்கணக்கில் புதிய தொற்றுகளும், ஆயிரக்கணக்கில் புதிய மரணங்களும் ஏற்படும் சேதிகள்தான் உலக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. கொரோனாவின் இத்தகைய மனித வேட்டைக்கு இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. ம்உலக அளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து, தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடம் என்ற மோசமான சாதனையை தொடர்கிறது.
இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,432 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே நாளில் 1,089-பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 40,23,179-ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 8,46,395 -பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் 69,561-பேர் உயிரிழந்துள்ளனர்.