காஷ்மீர் என்கவுண்ட்டர்; 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2020-09-04 14:03 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் யெடிபோரா பட்டான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் கூட்டணியாக பாதுகாப்பு வாகனங்களில் அந்த பகுதிக்கு சென்றனர்.  பின்னர் அங்கிருந்த மக்களை பாதுகாப்புடன் வெளியேற்றினர்.

இதன்பின் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.  இன்று காலை முதல் நடந்த இரு தரப்பினருக்கு இடையேயான இந்த கடுமையான சண்டையில் ஏறக்குறைய 5 மணிநேரத்திற்கு பின்பு ஒரு பயங்கரவாதி பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டான்.

இதேபோன்று படை வீரர்களில் ஒருவர் காயமடைந்து உள்ளார்.  அவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவரது உடல்நிலை சீராக உள்ளது என ராணுவ வட்டாரம் தெரிவித்து உள்ளது.  தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.  இதில் அடுத்த 5 மணிநேர இடைவெளியில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனால், பாதுகாப்பு படையினரின் என்கவுண்ட்டரில் பலியான பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.  எனினும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்