உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியா சிறந்த இடம் - பிரதமர் மோடி பெருமிதம்

கொரோனா தொற்றுக்குப்பின் உலக முதலீட்டாளர்களுக்கு சிறந்த இடமாக இந்தியா உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2020-09-04 01:04 GMT
புதுடெல்லி,

இந்தியா-அமெரிக்கா மூலோபாய ஒத்துழைப்பு மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போதைய சூழலில் மனிதர்களை மையப்படுத்திய புதிய மனநிலை வேண்டும். இந்த கொரோனா தொற்று காலத்தில் சுகாதார வசதிகளை சாதனையளவான காலத்தில் மேம்படுத்தியதன் மூலம் இந்த மனநிலையை இந்தியா உருவாக்கி இருக்கிறது. முதன் முதலாக முக கவசம் மற்றும் முகத்தை மறைக்கும் நடவடிக்கைளை பொது சுகாதார நடவடிக்கையாக ஊக்குவித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும் சமூக இடைவெளியை பொது பிரசாரமாக மேற்கொண்டதிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியது.

சமீபத்திய மாதங்களில் எனது அரசு மேற்கொண்ட தொலைநோக்கு சீர்திருத்தங்களால் இந்தியாவில் வர்த்தகம் எளிமையாக்கப்பட்டு உள்ளது. ஜனநாயகம் மற்றும் பன்மைத்தன்மையும் உறுதியளிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் கொள்கை தொடர்ச்சி போன்றவற்றால் கொரோனாவுக்கு பின் உலக முதலீட்டாளர்களுக்கு சிறந்த இடமாக இந்தியா உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்