இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; ஒரே நாளில் 83 ஆயிரம் பேருக்கு தொற்று

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 83 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2020-09-03 23:52 GMT
புதுடெல்லி,

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை தனது மாயவலையில் வீழ்த்தி வரும் கொரோனா வைரஸ், அதில் லட்சக்கணக்கானோரின் உயிரை குடித்து தொடர்ந்து வெறியாட்டம் போட்டு வருகிறது. ஏழை-பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் அனைத்து தரப்பினரையும் அவதிக்குள்ளாக்கி வரும் கொரோனாவின் கொட்டத்தை அடக்க முடியாமல் உலக மக்களினம் திகைத்து வருகிறது.

இப்படி உலகமே கொரோனாவிடம் சரணடைந்துள்ள நிலையில், இந்தியாவும் அந்த வைரசின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறி வருகிறது. இங்கும் நாள்தோறும் சில பத்தாயிரம் எண்ணிக்கையிலான மக்களை தனது கொடூர கரங்களால் வளைத்து வருகிறது, கொரோனா. அத்துடன் ஏராளமான மரணங்களையும் தினந்தோறும் நிகழ்த்தி வருகிறது.

அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 83 ஆயிரத்து 883 பேர் கொரோனாவிடம் சிக்கி உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். தினசரி பாதிப்பில் இப்படி உச்சத்தை எட்டியுள்ள கொரோனாவின் வெறியாட்டம் மத்திய-மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் 38 லட்சத்து 53 ஆயிரத்து 406 ஆக உயர்ந்து உள்ளது.

இதைப்போல நாடு முழுவதும் 1,043 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிர் விட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 67 ஆயிரத்து 376 ஆக அதிகரித்து உள்ளது. அதேநேரம் நாட்டின் இறப்பு விகிதம் 1.75 சதவீதமாக குறைந்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க கடந்த 24 மணி நேரத்தில் 68 ஆயிரத்து 584 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையை 29 லட்சத்து 70 ஆயிரத்து 492 ஆக உயர்த்தி இருக்கிறது.

குறிப்பாக நாட்டின் குணமடைந்தோர் விகிதம் 77.09 ஆக அதிகரித்து உள்ளது. தற்போதைய நிலையில் 8 லட்சத்து 15 ஆயிரத்து 538 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையே நாட்டில் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்து உள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியே 55 லட்சத்து 9 ஆயிரத்து 380 ஆக அதிகரித்து இருக்கிறது.

இவ்வாறு அதிகரித்து வரும் பரிசோதனைகள் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிப்பதற்கு வழி ஏற்படுவதாகவும், இதனால் சாவு விகிதம் தொடர்ந்து குறைவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கையை பொறுத்தவரை மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்கள்தான் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதத்தை பெற்றிருக்கின்றன. அதிலும் கடந்த வாரங்களின் நிலவரங்களை ஒப்பிடுகையில் டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இறப்பு விகிதம் தினசரி அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக வாராந்திர இறப்பு விகிதத்தை கணக்கிட்டால் டெல்லியில் நாள்தோறும் 50 சதவீதமும், கர்நாடகாவில் 9.6 சதவீதமும் சராசரியாக அதிகரித்து உள்ளது. அதேநேரம் ஆந்திரா (4.5 சதவீதம்), மராட்டியம் (11.5 சதவீதம்), தமிழகம் (18.2 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக ராஜேஷ் பூஷண் கூறினார். இதைப்போல தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்கள் 62 சதவீத எண்ணிக்கையை கொண்டிருக்கின்றன.

மேலும் செய்திகள்