கொரோனா பரவல் அதிகரித்த போதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது ஏன்? - மத்திய அரசு விளக்கம்

கொரோனா பரவல் அதிகரித்த போதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

Update: 2020-09-03 21:19 GMT
புதுடெல்லி,

கொரோனா பரவலை தொடர்ந்து இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 1-ந்தேதி முதல் 4-ம் கட்ட தளர்வுகள் அமலில் இருக்கிறது. மேலும் வருகிற 7-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து மற்றும் 21-ந்தேதி முதல் அரசியல், சமூக, மத கூட்டங்களுக்கு அனுமதி போன்றவையும் வழங்கப்பட்டு உள்ளன.

இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் கொரோனா பரவலின் வேகமும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 83 ஆயிரத்து 883 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதிகரித்து வரும் தொற்றின் மத்தியில் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் இந்த தளர்வுகளை மத்திய அரசு நியாயப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தொற்று அதிகரித்து வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் பின்னணியில் இதை பார்க்க வேண்டும். உலகிலேயே நாம்தான் 2-வது அதிக மக்கள் தொகையை கொண்ட நாடு.

நாம் பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரித்து இருக்கிறோம். நேற்று (நேற்று முன்தினம்) 24 மணி நேரத்தில் 11.70 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவும் புதிய நோயாளிகள் அதிகரிப்பதற்கு காரணம். அதேநேரம் மொத்த பரிசோதனையில் தொற்று சாத்தியக்கூறு 7.20 சதவீதமாகத்தான் உள்ளது.

மக்களின் உயிரைப்போல, வாழ்வாதாரமும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என அரசு நம்புகிறது. எனவேதான் படிப்படியான தளர்வு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் திடீரென அனைத்தையும் திறந்து விடவிலலை.

தளர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் போதுமான பரிசோதனை நடவடிக்கைகள், தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள், நிலையான சிகிச்சை நடைமுறைகள், மருத்துவ கட்டமைப்பு மேம்பாடு என அனைத்தையும் அரசு ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்