118 செயலிகள் தடை; விதிகளுக்கு உட்பட்டு பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்: மத்திய அரசு
இந்தியாவில் 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் விதிகளுக்கு உட்பட்டு பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
அதனை தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
இதனிடையே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி எனப்படும் செல்போன் விளையாட்டு செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
சீன செயலிகளுக்கு எதிரான இந்தியாவின் தடைக்கு சீன வர்த்தக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, உலக நாடுகளில் அந்நிய நேரடி முதலீட்டில், இன்டர்நெட் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு அதிக அளவிலான வெளிப்படையான நடைமுறைகளை இந்தியா கொண்டுள்ளது.
எனினும், இந்திய அரசின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய பொறுப்புணர்வு அவர்களுக்கு உள்ளது என அவர் கூறினார்.
பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டு உள்ள குல்பூஷண் ஜாதவ் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான அனைத்து சாத்தியப்பட்ட நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இதற்காக தூதரக அளவில் தொடர்ந்து அந்நாட்டிடம் தொடர்பில் இருந்து வருகிறோம் என கூறியுள்ளார்.
எல்லை பகுதியில் மீண்டும் அமைதி நிலவ, படைளை முழுவதும் வாபஸ் பெறுவது உள்ளிட்ட விசயங்களில் உண்மையான எண்ணத்துடன் சீனா ஈடுபட வேண்டும் என இந்தியா கடுமையாக வலியுறுத்துகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.