சந்திரயான்-3 லேண்டர் கருவியை சோதிக்க செயற்கை நிலவு பள்ளங்கள் - பெங்களூருவில் உருவாக்க இஸ்ரோ திட்டம்

சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்படும் லேண்டர் கருவியை சோதிக்க பெங்களூருவில் செயற்கை நிலவு பள்ளங்களை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Update: 2020-09-02 21:59 GMT
சென்னை,

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அடுத்த ஆண்டு (2021) சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. விண்ணில் ஏவுவதற்கு முன்பாக விண்கலத்தில் உள்ள லேண்டர் கருவி சோதனை செய்யப்பட உள்ளது.

இதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 215 கி.மீ. தூரத்தில் உள்ள சித்திரதூர்கா மாவட்டம் சல்லகேர் தாலுகாவில் உள்ள உல்லார்தி காவலுவில் ரூ.24.2 லட்சம் மதிப்பில் 10 மீட்டர் விட்டம், 3 மீட்டர் ஆழத்தில் செயற்கை நிலவு பள்ளங்கள் உருவாக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு, இந்த மாத இறுதியில் பணிகள் நிறைவு பெற இருக்கிறது. சந்திரயான்-3 லேண்டருக்கான சோதனைகளில் நிலவில் உள்ள பள்ளங்கள் முக்கியபங்கு வகிக்கிறது.

செயற்கை பள்ளங்களுடன், சந்திரயான்-3 தரை இறங்குவதற்கான நிலவின் மேற்பரப்பின் மாதிரியை இஸ்ரோ உருவகப்படுத்தும். இதில் லேண்டரின் சென்சார்கள் செயல்திறன் (எல்.எஸ்.பி.டி.) என்ற முக்கியமான சோதனை செய்யப்படும். அதோடு செயற்கை நிலவு தளத்தில் இஸ்ரோவின் சிறிய விமானம் 7 கி.மீ. உயரத்தில் இருந்து ‘சென்சார்’களுடன் தரை இறங்கும்.

விமானம் தரையிறங்கும் மேற்பரப்பில் இருந்து 2 கி.மீ. உயரத்தில் இருக்கும்போது, ‘சென்சார்’கள் மென்மையான முறையில் லேண்டர் தரையிறங்க வழிகாட்டும். இதன்மூலம் லேண்டரை வழி நடத்துவதில் அது எவ்வளவு திறமை வாய்ந்தது என்பது கண்டறியப்படும்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை நிறுவுதல் (ஐ.எஸ்.ஐ.டி.இ.) நிலையத்தில் லேண்டரை முழு அளவில் சோதிப்பதற்கு இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்