பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு; பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகன் நேற்று ஆஜரானார்.

Update: 2020-09-02 20:00 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அக்கட்சியின் தலைவர்கள் வெளியிடும் அவதூறு கருத்துகளை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை எனவும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் பேஸ்புக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகன் நேற்று ஆஜரானார். அதேபோல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பிரதிநிதிகளும் இதில் ஆஜரானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது; ஆன்லைன் செய்தி ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது; டிஜிட்டல் தளத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது மற்றும் அவரது கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு நாடாளுமன்ற நிலைக்குழுவின் தளத்தை பயன்படுத்துவதாக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் குற்றம்சாட்டினார். எனவே சசி தரூரை நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்