ஊரடங்குக்கு மத்தியில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் - சரத்பவார்

ஊரடங்குக்கு மத்தியில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் என்று சரத்பவார் கூறினார்.;

Update: 2020-07-26 03:01 GMT
நாசிக்,

நாசிக் மாவட்டத்தில் கொரோனா நிலைமை குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இப்போது நிலவும் சுகாதார நெருக்கடியை போலவே நாடும், மாநிலமும் நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ள கூடும். புனே, நாசிக், அவுரங்காபாத் மற்றும் நாக்பூர் ஆகியவை மராட்டியத்தின் தொழிற்துறை மையங்களாக உள்ளன. எனவே ஊரடங்குக்கு மத்தியில் தொழில்களின் மறுமலர்ச்சி குறித்து சிந்திக்க வேண்டும்.

வரும் காலத்தில் தொழிற்துறை நடவடிக்கைகளை முழு திறனுடன் மீண்டும் தொடங்குவதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த பிரச்சினைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஊரடங்கின் போது, சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது மராட்டியத்துக்கு திரும்பி வர விரும்புகிறார்கள்.

அவர்கள் எவ்வாறு திரும்பி வர முடியும் என்பதை கட்டாயம் சிந்திக்க வேண்டும்.

வருகிற 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிக்க வேண்டுமானால் கொரோனா நிலைமையை ஆய்வு செய்து, மக்களின் நம்பிக்கை பெற்ற பின்னர் தான் முடிவு செய்ய வேண்டும். மும்பையில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வருவதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடந்த சில மாதங்களாக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் கொரோனா நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்