பொருளாதார பிரச்சினைகளை தீா்ப்பதற்காக ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதியாக கூறியுள்ளார்.;

Update: 2020-07-26 02:00 GMT
மும்பை,

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பேட்டி நேற்று சாம்னாவில் வெளியாகி உள்ளது. அதில் அவர் பொருளாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என கூறியுள்ளார்.

ஊரடங்கு முற்றிலுமாக தளர்த்தப்படும் என ஒருபோதும் சொல்ல மாட்டேன். ஆனால் சில விஷயங்களை படிப்படியாக தொடங்கி வருகிறோம். ஒரு முறை தொடங்கப்பட்டால், அது மீண்டும் மூடப்படக் கூடாது. எனவே நான் பல கட்டங்களாக நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தேன். நீங்கள் பொருளாதாரமா, சுகாதாரமா என யோசிக்க முடியாது. 2-ம் சமமாக கருதப்பட வேண்டும்.

கொரோனா பிரச்சினை உலக போர். இது ஒட்டு மொத்த உலகையும் பாதித்து உள்ளது. எல்லாம் முடிந்துவிட்டது என அவசர கதியில் ஊரடங்கை தளர்த்திய நாடுகள் தற்போது மீண்டும் ஊடரங்கை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பலர் ஊரடங்கை எதிா்கின்றனர். ஊரடங்கு பொருளாதாரத்தை பாதிப்பதாக கூறுகின்றனர்.

அவர்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நான் ஊரடங்கை தளர்த்த தயாராக உள்ளேன். ஆனால் கொரோனாவால் உயிரிழக்கும் மக்களின் குடும்பத்தை நீங்கள் பார்த்து கொள்ள தயாரா? நாங்களும் பொருளாதாரத்தை நினைத்து கவலைப்படுகிறோம்.

இதேபோல தொழில்நுட்பங்களின் உதவியுடன் கொரோனா பிரச்சினையை வீட்டில் இருந்து கையாள முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்