அதிக கூட்டம் இன்றி சுதந்திர தின விழா: மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை
அதிக கூட்டம் இன்றி சுதந்திர தின விழா நடத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார். இதேபோல் மாநில தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரிகள் தேசிய கொடியை ஏற்றி வைப்பார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை அதிக கூட்டம் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து இருக்கிறது.
இதன்படி கொரோனா பரவலை ஒழிப்பதற்காக பாடுபடும் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களை சுதந்திர தின விழாவுக்கு அழைக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம். அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் சுதந்திர தின விழாவை நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.