திருவனந்தபுரத்தில் 7 கவுன்சிலர்களுக்கு கொரோனா பாதிப்பு; தனிமைப்படுத்தி கொண்ட மேயர்
திருவனந்தபுரத்தில் 7 கவுன்சிலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மேயர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் கே. ஸ்ரீகுமார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள 7 கவுன்சிலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் மேயர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் முதன்முறையாக நேற்று முன்தினம் அதிரடியாக 1,038 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது ஒருநாளில் இதுவரை இல்லாத உச்சபட்ச எண்ணிக்கையாகும். தொடர்ந்து, கேரளாவில் கொரோனா பாதிப்பு 1,078 பேருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டு இரண்டாவது நாளாக உச்சம் தொட்டது.
இதனால், ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், வருகிற 27ந்தேதி நடைபெற இருந்த சட்டசபை கூட்டத்தொடரை ரத்து செய்வது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது. வருகிற திங்கட்கிழமை சிறப்பு அமைச்சரவை கூட்டம் ஒன்று நடைபெறும். இதில், கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கேரளாவில் 16,110 பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 6,594 பேர் குணமடைந்து உள்ளனர். 9,466 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 50 பேர் உயிரிழந்து உள்ளனர் என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.