கொரோனாவுக்கான இந்திய தடுப்பு மருந்து; டெல்லி நபருக்கு செலுத்தி முதல் பரிசோதனை
இந்தியாவில் தயாரான கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ‘கோவேக்சின்’ முதன்முறையாக டெல்லியை சேர்ந்த நபருக்கு செலுத்தி பரிசோதனை தொடங்கியது.;
புதுடெல்லி,
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்புகளால் கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தியும், அதன் தீவிரம் குறையவில்லை. கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இந்த பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவும் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பு மருந்த ஒன்றை கண்டறிந்து உள்ளது.
இந்த தடுப்பு மருந்து மனிதருக்கு செலுத்தி பரிசோதனை செய்த பின்பு கிடைக்கும் முடிவுகளுக்கு ஏற்ப விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும். உலக மக்களின் நன்மைக்கான இந்த பரிசோதனைகளுக்காக 3,500 பேர் வரை முன்வந்து தங்களது பெயரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பதிவு செய்துள்ளனர்.
இதற்காக 2 கட்டங்களாக பரிசோதனை நடைபெறும். டெல்லி எய்ம்ஸ் தவிர்த்து, பாட்னா எய்ம்ஸ் மற்றும் பிற இடங்களிலும் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, உள்நாட்டிலேயே தயாரான கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ‘கோவேக்சின்’ முதன்முறையாக டெல்லியை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருக்கு இன்று செலுத்தப்பட்டு உள்ளது.
அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் உடல் வெப்பம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. அவரது உடல் ஆரோக்கியம் சீராக இருந்துள்ளது. அவருக்கு உடலில் வேறு பாதிப்புகளோ அல்லது இதற்கு முன்பே பாதிப்புகளுடனான வியாதிகளோ இல்லை என உறுதி செய்யப்பட்டது.
டெல்லி நபருக்கு தடுப்பு மருந்து செலுத்திய பின்னர் 2 மணிநேரம் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இதில், உடனடி பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அவர் ஒரு வாரம் வரை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.