கொரோனாவில் இருந்து இன்னும் விடுபடவில்லை - அமிதாப் பச்சன் பரபரப்பு டுவீட்

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தமக்கு கொரோனா வைரஸ் தொற்று குணமாகி விட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில செய்தித் தொலைக்காட்சிகள் சிலவற்றில் வெளியான செய்தியை மறுத்துள்ளார்.;

Update: 2020-07-23 17:41 GMT
மும்பை,

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கடந்த 11-ந் தேதி உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அபிஷேக்பச்சனின் மனைவி நடிகை ஐஸ்வர்யாராய், மகள் ஆராத்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தாய்-மகள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்களும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப்பச்சன், அவரது மகன், மருமகள், பேத்தி ஆகிய 4 பேரின் உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றில் இருந்து  குணமாகி விட்டதாக சில செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கு அமிதாப் பச்சன் இந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலியானது. கொரோனாவில் இருந்து நான் இன்னும் விடுபடவில்லை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்