"போதைப் பொருள் கடத்தல்காரர் முதல்வரின் மனைவிக்கு வேண்டியவர்" அதிர வைத்த பெண் போலீஸ் அதிகாரி
போதைப் பொருள் கடத்தல்காரரான லுகோசெய் ஸூவோ-வை விடுதலை செய்யுமாறு அதிகாரிகள் மட்டத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் குறித்து நீதிமன்றத்தில் பிருந்தா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
இம்பால்
மணிப்பூரில் போதை மருந்து கடத்தல் குற்றவாளிகளைப் பிடிப்பதில் பெரும்பங்காற்றிய காவல்துறை பெண் அதிகாரி பிருந்தா, 2018-ம் ஆண்டு போதை மருந்து கடத்தல்காரரான லுகோசெய்-யை 7 கூட்டாளிகளுடன் கைது செய்தார். கைதான சமயத்தில், லுகோசெய், மாவட்ட தன்னாட்சி அதிகாரக் குழுத் தலைவராக இருந்தார்.
லுகோசெய்யை ஜாமீனில் விடுவித்தது குறித்தும், அவரது கைது நடவடிக்கைக்காக முதல்வர் பைரேன் சிங் தன்னிடம் கோபம் கொண்டது குறித்தும் தனது பேஸ்புக் பக்கத்தில் பிருந்தா பதிவிட, இதனை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் பிருந்தா, தனக்கு மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் குறித்து விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், ”போதைப் பொருள் கடத்தல்காரர் லுகோசெய், முதல்வரின் மனைவி ஆலிஸ்-க்கு வேண்டியவர் என்பதால், அவரை கைது செய்தால் ஆலிஸ் கோபம் அடைவார் என்று, தன்னை உயர் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து லுகோசெய்யை விடுவிக்க பல தரப்பில் இருந்தும் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை நான் ஏற்கவில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திரும்பப் பெறுமாறும் முதல்வர் தரப்பில் இருந்து எனக்கு அழுத்தம் வந்தது” என்றும் பிருந்தா கூறியுள்ளார்.
தன்னையும் மற்ற காவல்துறை அதிகாரிகளையும் முதல்வர் அவரது இல்லத்திற்கு அழைத்திருந்தார். அப்போது, இதற்காகத்தான் நான் உங்களுக்கு விருதுகள் அளித்தேனா? அலுவலக ரகசியம் என ஒன்று இருப்பதே தெரியாதா? என கேட்டார். மேலும், அனைவரையும் கடுமையாக வசைபாடினார் என்றும் பிருந்தா பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் மணிப்பூர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ விசாரணை தேவை என்று மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது.