“பாரதீய ஜனதாவில் சேரமாட்டேன்” - சச்சின் பைலட் மீண்டும் திட்டவட்டம்

பாரதீய ஜனதாவில் சேரப் போவது இல்லை என்ற சச்சின் பைலட் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.

Update: 2020-07-15 23:15 GMT
புதுடெல்லி, 

முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக துணை முதல்-மந்திரி பதவியையும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியையும் இழந்துள்ள சச்சின் பைலட்டின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றி ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் பாரதீய ஜனதாவில் சேரக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் ஏற்கனவே மறுத்து உள்ளார்.

இந்த நிலையில், தான் அந்த கட்சியில் சேரப்போவது இல்லை என்பதை அவர் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதாவில் சேரமாட்டேன்

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவை தோற்கடித்து, காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த கடுமையாக பாடுபட்டவன் நான். ஆனால் அந்த மாநிலத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் நான் காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேரப்போவதாக ஊகங்களின் அடிப்படையில் வதந்திகளை பரப்ப முயற்சிக்கிறார்கள். எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.

பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் நான் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிக்கிறேன். பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படவில்லை. அந்த கட்சி யில் சேரப்போவதும் இல்லை.

சுயமரியாதை

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ராகுல் காந்தி விலகிய பின்னர் அசோக் கெலாட்டும், காங்கிரஸ் காரிய கமிட்டியில் உள்ள அவரது நண்பர்களும் எனக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொண்டனர். இதனால் நான் எனது சுயமரியாதைக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அசோக் கெலாட் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு கோபம் எதுவும் கிடையாது. அவர் என்னையும் எனது ஆதரவாளர்களையும் ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக்கு உழைக்க அனுமதிக்கவில்லை. எனது உத்தரவுகளை நிறைவேற்றக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. எனக்காக நான் எந்த சலுகைகளையும் கேட்கவில்லை. தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நானும், எனது ஆதரவாளர்களும் விரும்பினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்-மந்திரி பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டது பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சச்சின் பைலட், “உண்மைக்கு எதிராக சலசலப்பை ஏற்படுத்தலாம், ஆனால் அதை தோற்கடிக்க முடியாது” என்று கூறி உள்ளார்.

அசோக் கெலாட் தாக்கு

இதற்கிடையே முதல்-மந்திரி அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் சச்சின் பைலட்டை மறைமுகமாக தாக்கினார்.

அவர் கூறியதாவது:-

புதிய தலைமுறையினரை நாங்கள் நேசிக்கிறோம். அவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். நன்றாக ஆங்கிலம் பேசுவதாலோ, அழகாக இருப்பதாலோ போதும் என்று நினைத்துவிடக்கூடாது. இந்த நாட்டுக்காக அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்கள்? அவர்களுடைய கொள்கை என்ன? என்பதெல்லாம் முக்கியம்.

அவர்கள் நன்றாக பேசலாம், சிந்திக்கலாம். ஆனால் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சிக்கிறார்கள். இப்படித்தான் ஒரு கட்சியை வளர்ப்பதா? தங்க கத்தி என்பதற்காக, அதை எடுத்து குத்திக் கொள்ள முடியாது.

இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “பாரதீய ஜனதாவில் சேரப் போவது இல்லை என்று கூறி இருக்கும் சச்சின் பைலட் அந்த கட்சியின் ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள சொகுசு ஓட்டல்களில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்து இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், அங்கு அவர்களுக்கு அரியானா போலீசார் பாதுகாப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

சச்சின் பைலட் பாரதீய ஜனதாவில் சேரப்போவது இல்லை என்பது உண்மையானால், அரியானாவில் அந்த கட்சியின் உபசரிப்பை நிராகரித்துவிட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அவர் விடுவிக்க வேண்டும் என்றும் ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.

மேலும் செய்திகள்