அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் கூகுள் நிறுவனம் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு - பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப்பின் சுந்தர் பிச்சை தகவல்

இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக அதன் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார்.

Update: 2020-07-14 00:13 GMT
புதுடெல்லி, 

தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறி இன்று புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சுந்தர் பிச்சை. இவர் பிரதமர் மோடியை பல முறை நேரில் சந்தித்து பேசி உள்ளார்.

தற்போது கொரோனா தொற்றால் இந்தியா மட்டுமின்றி உலகமே முடங்கி இருக்கும் நிலையில் நேற்று இருவரும் மீண்டும் சந்தித்து பேசினர். மெய்நிகர் (காணொலி) முறையில் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.

குறிப்பாக தரவு (டேட்டா) பாதுகாப்பு, தனிநபர் சுதந்திரம் குறித்த கவலை, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மாற்றுவதில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், ஆன்லைன் கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மோடியும், சுந்தர் பிச்சையும் ஆலோசனை நடத்தினர். மேலும் கொரோனாவால் உலகம் முழுவதும் தற்போது உருவாகி வரும் புதிய பணிச்சூழல் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

முன்னதாக தற்போதைய கொரோனா சூழலில் தொற்று தொடர்பான தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க கூகுள் நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டினார். இதைப்போல பெங்களூருவில் தொடங்கப்படும் செயற்கை நுண்ணறிவு சோதனைக்கூடம் உள்பட இந்தியாவில் கூகுள் நிறுவனம் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம், சுந்தர் பிச்சை எடுத்துரைத்தார்.

இனிமையான உரையாடல்

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்ததாவது:-

சுந்தர் பிச்சையுடன் இன்று (நேற்று) காலையில் மிகவும் இனிமையான ஒரு உரையாடல் நடந்தது. நாங்கள் பரவலாக நிறைய விஷயங்கள் குறித்து பேசினோம். குறிப்பாக இந்திய விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து விவாதித்தோம்.

மேலும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகளாவிய கொரோனா தொற்று ஏற்படுத்தி இருக்கும் சவால்கள் குறித்தும், தரவு பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், ‘சுந்தர் பிச்சையுடனான சந்திப்பின் போது, தொழில்நுட்ப நிறுவனங்கள் சந்தித்து வரும் நம்பிக்கை இழப்பை களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். மேலும் சைபர் தாக்குதலின் வடிவில் வரும் சைபர் குற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடி சுந்தர் பிச்சையிடம் எடுத்துரைத்தார். தொழில்நுட்பத்தில் இருந்து விவசாயிகள் பெறும் பலன்கள் மற்றும் விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவால் கிடைக்கும் பலன்களின் சாத்தியக்கூறுகள் குறித்தும் பிரதமர் மோடி விவாதித்தார்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த சந்திப்பை தொடர்ந்து சுந்தர் பிச்சை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், கூகுள் நிறுவனம் இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தார்.

மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி அமல்படுத்திய வலுவான நடவடிக்கையான ஊரடங்கு, தொற்று நோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் வலுவான அடித்தளமாக அமைந்திருப்பதாகவும் அதில் அவர் பாராட்டி இருந்தார்.

மேலும் செய்திகள்