பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 20.46% குறைவு; அரியானா போலீசார்
நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 20.46% குறைந்துள்ளன என அரியானா போலீசார் தெரிவித்து உள்ளனர்.;
சண்டிகர்,
நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த மார்ச் 24ந்தேதி முதன்முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும், பாதிப்புகள் குறையாத நிலையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்வது, வாகன போக்குவரத்து உள்ளிட்டவை பெருமளவில் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளால் ஒரு புறம் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ள சூழலில் குற்ற சம்பவங்கள் குறைவதற்கும் அது ஒரு காரணியாக அமைந்து விட்டது.
கடந்த 2019ம் ஆண்டின் முதல் 6 மாதங்களுடன் ஒப்பிடும்பொழுது, 2020ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் நாட்டின் பல இடங்களில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. இதுபற்றி அரியானா போலீசார் கூறும்பொழுது, நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 20.46% குறைந்துள்ளது.
இதேபோன்று கற்பழிப்பு வழக்குகள் 18.18%, கடத்தல் வழக்குகள் 27.14% குறைந்துள்ளன என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.