கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் 90 சதவீதம் பேர் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள்: மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் தகவல்

கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் 90 சதவீதத்தினர் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்ற தகவல், மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் வெளியானது.

Update: 2020-07-09 23:30 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலவரம் குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் எஸ்.ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி, அஷ்வினி குமார் சவுபே, மன்சுக் மாண்டவியா மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோல் பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நாட்டில் அதிகளவு கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

‘அன்லாக்- 2’ என்ற பெயரில் கட்டுப்பாடுகள் இரண்டாவது முறையாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின்போது, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு முயற்சிகள் குறித்த விரிவான அறிக்கையை நோய்களுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் டாக்டர் சுஜித் கே.சிங் தாக்கல் செய்தார்.

மேலும், இந்த கூட்டத்தில் வெளியான முக்கிய தகவல்கள் வருமாறு:-

* உலகளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 5 நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது, இந்தியாதான் குறைவான பாதிப்பை சந்தித்துள்ளது. 10 லட்சம் பேரில் 538 பேருக்குத்தான் இங்கு தொற்று உள்ளது. 10 லட்சம் பேரில் பலி எண்ணிக்கை 15 ஆக உள்ளது. உலகளவில் சராசரியாக 10 லட்சம் பேரில் 1,453 பேருக்கு தொற்று இருக்கிறது, 68 பேர் பலியாகி உள்ளனர்.

* இந்தியாவில் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களில் 90 சதவீதத்தினர், மராட்டியம், தமிழகம், டெல்லி, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலத்தினர் ஆவார்கள். சிகிச்சை பெறுவோரில் 80 சதவீதத்தினர் 49 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

* கொரோனாவில் பலியானவர்களில் 86 சதவீதத்தினர், மராட்டியம், டெல்லி, குஜராத், தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பலியானவர்களில் 80 சதவீதத்தினர், 32 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான்.

* இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்வதற்காக தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், நாடு முழுவதும் சிகிச்சைக்கு 3,914 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 737 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 39 ஆயிரத்து 820 தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள், 1 லட்சத்து 42 ஆயிரத்து 415 ஆக்சிஜன் ஆதரவு படுக்கைகள், 20 ஆயிரத்து 47 வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் போடப்பட்டுள்ளன.

* இதுவரையில் 21.3 கோடி என்-95 முக கவசங்கள், 1.2 கோடி சுய பாதுகாப்பு கவச உடைகள், கருவிகள், 6.12 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

* பொது மக்களிடையே தகவல் தொடர்பு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரம் பெற்ற 8-வது குழுவின் தலைவர் அமித் கரே விளக்கினார். இந்த குழுவுக்கு போலி செய்திகள் தொடர்பாக 6.755 எச்சரிக்கைகள் வந்ததாகவும், அவற்றில் 5,890-க்கு பதில் அளிக்கப்பட்டதாகவும், 17 வெளிநாட்டு ஊடக செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் செய்திகள்