கொரோனா பரவலை கட்டுப்படுத்திய உத்தரபிரதேசம்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு
கொரோனா வைரஸ் தொற்று பரவலை நேர்த்தியாக கட்டுப்படுத்தியுள்ள உத்தரபிரதேச மாநிலத்தை பிரதமர் நரேந்திர மோடி மனம்திறந்து பாராட்டினார்.;
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகம் எடுத்துள்ளது. அதே நேரத்தில் 24 கோடி பேரை மக்கள் தொகையை கொண்டுள்ள உத்தரபிரதேச மாநிலம், இந்த தொற்று நோய் பிரச்சினையை நேர்த்தியுடன் கையாண்டு கட்டுப்படுத்தி உள்ளது.
அந்த மாநிலத்தில் 31 ஆயிரத்து 156 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 845 பேர் மட்டுமே உயிரிழந்தனர். 20 ஆயிரத்து 331 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 9,980 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வளவு பெரிய மாநிலமாக இருந்து கொண்டு உத்தரபிரதேசம், கொரோனா பரவலை தடுத்திருப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இதை பிரதமர் மோடியும் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இருந்து கொண்டு பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று காணொலி காட்சி வழியாக கலந்துரையாடியபோது, கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ள அந்த மாநிலத்தை மனம் திறந்து பாராட்டினார். இதற்கு முன் இப்படியொரு தொற்றுநோயை சந்தித்திராத காசி என்னும் வாரணாசி, கொரோனா நெருக்கடியை தீவிரமாக எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
100 ஆண்டுகளுக்கு முன்னதாக இதேபோன்றதொரு தொற்று நோய் (ஸ்பானிஷ் புளூ) பரவியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அப்போது இந்தியாவின் மக்கள் தொகை குறைவாக இருந்தபோதும், மிக அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். இப்போதும்கூட இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியபோது நிபுணர்கள் கவலைகள் எழுப்பியதை குறிப்பிட்ட அவர், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் நகர்வாலும், உணவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அலைந்தோராலும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததாக கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியபோது கூறியதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் 23-24 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலம் என்பதால், சந்தேகங்களும், பயங்களும் எழுந்தன. ஆனால் மக்களின் கடின உழைப்பாலும், ஒத்துழைப்பாலும் அதை கடந்து வர முடிந்துள்ளது. உத்தரபிரதேசத்தை போன்றுதான் பிரேசில் நாடும் மக்கள் தொகையை கொண்டுள்ளது. ஆனால் அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உத்தரபிரதேசத்தில் சுமார் 800 பேர் மட்டுமே பலியாகி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பரவல் தொற்றின் வேகத்தை அரசு கட்டுப்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களும் வேகமாக குணம் அடைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்று பரவலின்போது தேவையில் இருந்த மக்களுக்கு உதவியதில் வாரணாசி மக்கள், அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மக்கள் தொடர்ந்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் மோடியால் பாராட்டப்பெற்றுள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.