லடாக் எல்லையில் குறிப்பிட்ட பகுதியில் சீன ராணுவம் முழுமையாக வாபஸ் - கூடாரங்களும் அகற்றப்பட்டன

லடாக் எல்லையில் குறிப்பிட்ட பகுதியில் சீன ராணுவம் முழுமையாக வாபஸ் பெறப்பட்டது. கூடாரங்களும் அகற்றப்பட்டு விட்டன.

Update: 2020-07-08 23:15 GMT
புதுடெல்லி, 

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை, தொடர்கதையாய் நீண்டு வருகிறது.

இந்த சூழலில் கடந்த மே மாதம் முதல் வாரம், இரு தரப்பு வீரர்கள் கிழக்கு லடாக் எல்லை பகுதியில் மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 15-ந் தேதி அங்கு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன துருப்புகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சீன தரப்பில் 35 துருப்புகள் பலியானதாக அமெரிக்க உளவு அறிக்கை கூறுகிறது.

இந்த மோதலைத் தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதியில் இரு தரப்பும் படைகளை குவிக்க, பதற்றம் மேலும் அதிகரித்தது. இந்திய ராணுவ தளபதி நரவானே லடாக் சென்று, கள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்தார். எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்காக இரு தரப்பினரும் கடந்த சில வாரங்களாக பல சுற்றுகளாக ராஜதந்திர ரீதியிலும், ராணுவ ரீதியிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

அந்த வகையில் கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக்கில் மோதல் நடந்த பகுதியில் இருந்து படைகளை விலக்கிக்கொள்வது என இரு தரப்பும் ஒருமித்த கருத்துக்கு வந்தனர். தொடர்ந்து 30-ந் தேதி ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு மோதலை முடித்துக்கொண்டு, எல்லையில் இருந்து படைகளை விரைவில் திரும்பப்பெறவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடி சற்றும் எதிர்பாராத வகையில் அதிரடியாக கடந்த 3-ந் தேதி லடாக் எல்லைக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு கள நிலவரத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “ ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது, ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் செயல்பட்டவர்கள் தோல்வியை சந்தித்திருக்கிறார்கள் அல்லது அழிந்திருக்கிறார்கள், அதற்கு சரித்திரம் சான்றாக அமைந்திருக்கிறது” என குறிப்பிட்டார்.

இது இந்தியா பின்வாங்கப்போவதில்லை, நிலைமையை உறுதியாக கையாளும் என்ற தெளிவான செய்தியை சீனாவுக்கு சொல்லாமல் சொல்லியது.

அதன் தொடர் நிகழ்வாக 5-ந் தேதி, எல்லை பிரச்சினையில் இரு தரப்பு சிறப்பு பிரதிநிதிகளாக உள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலும், சீன வெளியுறவு மந்திரி வாங் யியும் 2 மணி நேரம் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சு வார்த்தை இணக்கமான முறையில் நடந்தது.

இதில் இரு தரப்பும் எல்லையில் சமாதானத்தையும், அமைதியையும் திரும்பக்கொண்டு வருவதற்கு உதவும் வகையில் அனைத்து நிலைகளில் இருந்தும் இரு தரப்பு படைகளையும் விரைவாக திரும்பப்பெறுவது என ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி மறுநாளே (திங்கட்கிழமை) இரு தரப்பும் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா, பிங்கர் பகுதிகளில் இருந்து பரஸ்பரம் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியது.

இப்போது ஹாட்ஸ்பிரிங்ஸில் ரோந்து புள்ளி 15-ல் இருந்து சீன ராணுவத்தை முழுமையாக திரும்ப பெறுவதும், அனைத்து கூடாரங்களை அகற்றுவதும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த சில நாட்களில் இந்திய ராணுவ வீரர்கள், சீன துருப்புகளை திரும்ப பெறும் நடவடிக்கை முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை சோதித்து அறிவார்கள் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மேலும் கோக்ராவில் இருந்து (ரோந்து புள்ளி 17-ஏ) இரு தரப்பும் படைகளை திரும்ப பெறுவது இன்று (வியாழக்கிழமை) முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோக்ரா மற்றும் ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகள்தான், இரு படைகளும் கடந்த 8 வார காலமாக கண்மீது கண்வைத்து கண்காணித்து வந்த பகுதிகள் ஆகும். படைகள் வாபஸ் பெறப்பட்ட உடன் இந்த வாரத்தின் பிற்பகுதியில் இரு தரப்பு ராணுவமும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்