மூன்று மாதங்களுக்கு முன் சென்ற மனைவி: கொரோனா அச்சம் காரணமாக வீட்டிற்குள் விட மறுத்த கணவன்

பெங்களூரில் கொரோனா அச்சம் காரணமாக மனைவியை கணவர் வீட்டிற்குள் விட மறுத்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2020-07-07 16:48 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 3 மாதங்களாக வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்து வந்தது. ஆனால் கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி முதல் கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து பலர் கர்நாடகத்திற்கு வந்தனர். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து பஸ் போக்குவரத்தும் தொடங்கியது.

இதைதொடர்ந்து கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. 200, 300, 400 என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,200, 1,500 என்ற ரீதியில் அதிகரித்துள்ளது. அதுபோல் பலி எண்ணிக்கையும், பாதிப்பும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்கி வரும் கொரோனா வைரஸ் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையும், பல்வேறு துறை அதிகாரிகளையும் தாக்கி வருகிறது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு திரும்ப முடியாமல் தனது அம்மா வீட்டில் தவித்து வந்தார்.

மூன்று மாத தவிப்பிற்கு பின்னர் கர்நாடக மாநில அரசு ஒரு சில நிபந்தனைகளுடன் தளர்வுகளை அறிவித்தது. இதனை பயன்படுத்தி கொண்ட அந்த பெண் கணவர் வீட்டிற்கு திரும்பி உள்ளார். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக கணவர் கொரோனா வைரஸ் பரவுவதை காரணம் காட்டி தன் மனைவியை வீட்டிற்குள் விட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மனைவியை வேறு எங்காவது சென்று தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அப்பெண் வர்தூர் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் பெண்கள் ஹெல்ப் லைனையும் துணைக்கு அழைத்தார். போலீசார் மற்றும் பெண்கள் ஹெல்ப் லைன் அதிகாரிகள் கணவருக்கு ஆலோசனை வழங்கியதுடன் கொரோனா அச்சம் குறித்த அவரது தவறான எண்ணங்களை விளக்கி கூறினர்.

அதன் பின்னரே சமாதானம் அடைந்த அவர் மனைவியை வீட்டில் செல்ல அனுமதித்தார். மேலும் மனைவியை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்