சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி

இந்திய வீரர்கள் 20 பேரை படுகொலை செய்த சம்பவத்தில் சீனா தனது நிலைப்பாட்டை நியாப்படுத்த இந்திய அரசு அனுமதித்தது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-07-07 10:49 GMT
சென்னை,

லடாக் எல்லைப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்க்ளுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இது தொடர்பாக அவ்வபோது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வரும் அவர், இந்த சம்பவத்தை முறையாக அரசு கையாளவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதில், தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை என குறிப்பிட்டுள்ள அவர், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீனா தனது துருப்புக்களை திரும்பப் பெற்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், கால்வான் பள்ளத்தாக்கின் இறையாண்மை பற்றிய தெளிவான தகவல்  இடம்பெறாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில், முன்பிருந்த இருந்த நிலையே தொடர வேண்டும் என ஏன் இந்தியா வலியுறுத்தவில்லை? என்றும் நமது மண்ணில் ஊடுருவி ஆயுதங்களற்ற 20 இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்த சம்பவத்தில், சீனா தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

மேலும் செய்திகள்