65 வயதுக்கு மேற்பட்டோர் தபால் ஓட்டு போட அனுமதிக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் தேர்தல் கமிஷனுக்கு மம்தா கட்சி கடிதம்

கடந்த மாதம் 19-ந் தேதி, தேர்தல் நடத்தை விதிமுறைகளில் மத்திய சட்ட அமைச்சகம் ஒரு திருத்தம் கொண்டு வந்தது.

Update: 2020-07-06 23:00 GMT
கொல்கத்தா,

கடந்த மாதம் 19-ந் தேதி, தேர்தல் நடத்தை விதிமுறைகளில் மத்திய சட்ட அமைச்சகம் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அதில், தேர்தல்களின்போது, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தபால் ஓட்டு போட அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு இருந்தது.

வயதானவர்கள் கொரோனாவால் தாக்கப்படும் ஆபத்து அதிகம் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த முடிவை ரத்து செய்யுமாறு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சுப்ரதா பக்‌ஷி, தேர்தல் கமிஷனுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போட அனுமதிக்கும் முடிவு தன்னிச்சையானது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. கொரோனாவுக்காக தற்காலிகமாக இல்லாமல், நிரந்தரமாகவே இந்த முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை.

நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 சதவீதம்பேர் உள்ளனர். அவர்கள், வாக்குச்சாவடிகளில் நேரில் வாக்களிக்கும் உரிமையை இம்முடிவு பறிக்கிறது.

தபால் ஓட்டுகள் போட அனுமதிக்கப்பட்டால், தீய நோக்கம் கொண்டவர்களின் நிர்பந்தத்துக்கு பணிந்து ஓட்டுப்போட வேண்டி இருக்கும். பெரும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். அது நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்தும் நோக்கத்துக்கு முரணாக அமையும். இந்திய ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கும்.

மேலும், பிரதமர் மோடி மற்றும் 13 மாநில முதல்-மந்திரிகள் 65 வயதை தாண்டியவர்கள். அவர்கள் அபத்தமான சூழ்நிலையை உணர்வார்கள். அதாவது, அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்வார்கள். ஆனால், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பார்கள்.

65 வயதை தாண்டிய ஒருவர் தேர்தலில் போட்டியிடலாம், பிரசாரம் செய்யலாம், ஆனால் நேரில் வாக்களிக்க முடியாது என்பது கேலிக்கூத்தாக உள்ளது. ஆகவே, இந்த முடிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்