உலகம் சந்தித்துள்ள சவால்களுக்கு புத்தரின் கொள்கைகள் மூலம் தீர்வு பிரதமர் மோடி பேச்சு

தர்மசக்கர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, உலகம் சந்தித்துள்ள சவால்களுக்கு புத்தரின் கொள்கைகள் மூலம் தீர்வு காண முடியும் என்று கூறினார்.

Update: 2020-07-04 22:59 GMT
புதுடெல்லி,

உலகுக்கு அன்பு, அகிம்சையை போதித்த கவுதம புத்தர், துறவறம் மேற்கொண்ட தனது 5 சீடர்களுக்காக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சாராநாத்தில் முதல் பிரசங்கத்தை மேற்கொண்டார். மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சர்வதேச புத்த கூட்டமைப்பின் சார்பில் நேற்று அந்த நாள் தர்மசக்கர தினமாக கொண்டாடப்பட்டது. புத்தர்கள் தங்கள் குருவுக்கு மரியாதை செலுத்தும் தினமாக இதை குரு பூர்ணிமாவாக கொண்டாடினார்கள்.

சர்வதேச புத்த கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தர்மசக்கர தின விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புத்தமதம் அன்பு, அமைதி, அகிம்சை, கருணையை போதிப்பதோடு ஏழைகள், பெண்களை மதிக்க வேண்டும் என்று போதிக்கிறது. புத்தரின் போதனைகள் சிந்தனையிலும், செயலிலும் எளிமையை போற்றுவதாக அமைந்து இருக்கின்றன.

புத்தர் சாராநாத்தில் மேற்கொண்ட முதல் பிரசங்கத்திலும் அதன்பிறகு கற்பித்த போதனைகளிலும் நம்பிக்கை, குறிக்கோள் என்ற இரு விஷயங்களை பற்றி பேசினார். அவற்றுக்கு இடையே இருக்கும் வலுவான தொடர்பை அவர் கண்டார்.

இன்றைய காலகட்டத்தில் உலகம் பெரும் சவால்களை சந்தித்து அவற்றுடன் போராடி வருகிறது. புத்தரின் கொள்கைகளும், கோட்பாடுகளும் கடந்த காலத்திலும் பொருத்தமாக இருந்தது. இன்றைய காலத்துக்கும் அது பொருந்துவதாக உள்ளது. இதேபோல் எதிர்காலத்திலும் பொருத்தமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் உலகம் சில புதுமையான சவால்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இந்த சவால்களுக்கு புத்தரின் கொள்கைள் மூலம் தீர்வு காண முடியும்.

புத்தரின் கோட்பாடுகள் ஒருவருக்கு ஊக்கத்தை அளித்து, சாந்தப்படுத்தக்கூடியது. மேலும் மனிதகுலத்துக்கு நல்வழியை காட்டக்கூடியது. எனவே இளைஞர்கள் தங்கள் மனதில் நிறுத்த வேண்டும். உலகளாவிய பிரச்சினைகளுக்கு ஊக்கம் மிகுந்த இளைஞர்கள் தீர்வு கண்டு வருகிறார்கள்.

புத்தமத தலங்களை இணைக்க நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் குஷிநகர் விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. புத்த தலங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதற்கு இது உதவியாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஆண்டில் உலகம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி ஏற்படவேண்டும் என்று இந்த புனித நாளில் வாழ்த்துவதாகவும் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று உலகில் மனித வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்து இருக்கும் இன்றைய சூழ்நிலையில் புத்தரின் போதனைகள் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துவதாகவும், புத்தர் போதித்த அன்பு, அகிம்சையை பின்பற்றி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இணையதளம் மூலம் கண்டு களித்தனர்.

மேலும் செய்திகள்