சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கு தடை; கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு

சென்னையில் இருந்து வருகிற 19ந்தேதி வரை விமானங்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது என கொல்கத்தா விமான நிலையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2020-07-04 11:08 GMT
கொல்கத்தா,

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  தொடர்ந்து, தமிழகம், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கூடுதலாக சென்றுள்ளது.  தமிழகத்தில் தலைநகர் சென்னைதான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முதலிடம் வகிக்கிறது.  சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,689 ஆக உள்ளது.  இன்று வரை 13 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 1,009 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து வருகிற 6ந்தேதி முதல் 19ந்தேதி வரை விமானங்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பொன்றை இன்று வெளியிட்டுள்ளது.

இதுபற்றி கொல்கத்தா விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து, வருகிற 6ந்தேதி முதல் 19ந்தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, எது முன்பே வருமோ அதுவரை, விமான சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்